Blogger news

Wednesday, 12 November 2014

குழந்தை வளர்ப்பு: என் பொம்மை எனக்கு மட்டும்தான்!

2 ½ வயது முதல் 3 வயது வரை
நீங்கள் செய்யும் அனைத்துச் செயல்களையும் உங்கள் குழந்தை செய்து பார்க்க முயலும். ஆனால், சில நேரம் நீங்கள் செய்யாததையும் குழந்தை செய்யும். பல நேரம் உங்களுக்கு ஆச்சரியமூட்டும். சில நேரம் அதிர்ச்சியும் தரலாம். ஆனால், நிதானமாகக் குழந்தையைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அதற்குக் கீழ்க்கண்ட குறிப்புகள் உதவும்:
1. பெரியவர்களை அப்படியே பின்பற்றுவதன் மூலம் குழந்தை உறவுகளைப் புரிந்துகொள்ளும்.
2. குழந்தை அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணும்போது, பெற்றோர் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.
3. சின்னச் சின்ன வித்தியாசங்களைத் தானே கண்டுபிடிக்க, குழந்தைக்கு உதவுங்கள். இது வாசிப்புப் பழக்கத்தின் தொடக்கப் புள்ளி.

சுய உணர்வு: குழந்தையின் மனநிலை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். பெரும்பாலான நேரம் தனக்குத் தேவையான விஷயங்களைத் தானே செய்துகொள்ளத்தான் குழந்தை விரும்பும். ஆனால், சில நேரம் குழந்தைத்தனமாகச் செயல்படவும் ஆசைப்படும். அத்தகைய தருணங்களில் குழந்தையின் உணர்வைப் புரிந்துகொண்டு, கொஞ்ச வேண்டும்.
உடல்: பல் தேய்ப்பது, சாப்பிடுவது எனத் தன் கைகளையும், விரல்களையும் விதவிதமாகப் பயன்படுத்திப் பழகும்போது குழந்தை லாகவமாக அனைத்துச் செயல்களையும் செய்யப் பழகும்.

உறவுகள்: மற்ற குழந்தைகள் அருகில் இருக்கும்போது தானும் விளையாட குழந்தைக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், மற்ற குழந்தைகளுடன் தன் பொருள்களைப் பகிர்ந்துகொள்ள குழந்தை இன்னும் கொஞ்சம் வளர வேண்டும்.

புரிதல்: காலையில் எழுந்து பல் தேய்ப்பது, பால் குடிப்பது, சிறிது நேரம் விளையாடுவது, குளிப்பது என வழக்கமான வேலைகளை முறைப்படி செய்யும்போது அன்றாட வேலைகளின் சீரான போக்கைக் குழந்தை புரிந்துகொள்ளும். அடுத்தடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு குதூகலமான விளையாட்டைப் போல் குழந்தைக்குச் சொல்லிக் கொடுத்து, பழக்கப்படுத்துங்கள்.


கருத்துப் பரிமாற்றம்: ஒரே கதையைத் திரும்ப திரும்பக் கேட்கக் குழந்தைக்குப் பிடிக்கும். மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தைக் கேட்பதன் மூலம், விரைவில் ஒரு நாள் அதே கதையைக் குழந்தை உங்களுக்குச் சொல்ல ஆரம்பிக்கும்.

தொகுப்பு: ம.சுசித்ரா

No comments:

Post a Comment