முல்லைப் பூவுக்கும்,
பிச்சிப் பூவுக்கும்
என்ன வித்தியாசம் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த நிலையில் சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள
பூ இன்னதுதான் என்று அறிவியல்பூர்வமாக அறுதியிட்டுச் சொல்வது எவ்வளவு சிரமமான காரியம்?
இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே குறிஞ்சிப் பாட்டு 99 மலர்களைப் பதிவு செய்திருக்கிறது. சங்க இலக்கியம்
முழுவதும் இறைவனைப் பாடவும், மன்னனைப் புகழவும்
உவமையாகவும் ஏராளமான தாவரங்களைச் சங்கப் புலவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால்,
அவர்கள் சொன்னது
எந்தத் தாவரம் என்ற குழப்பம் தொடர்கிறது.
இந்தப் பின்னணியில்
சங்கப் பாடல்களில் 6 தாவரங்களை
எடுத்துக்கொண்டு, புலவர்கள்
பாடிய அந்தத் தாவரங்கள் எவை என்பதைச் சரியாக நிறுவி இருக்கிறார் மதுரை
காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத்தின் பேராசிரியை முனைவர் இரா. காஞ்சனா.