Blogger news
Showing posts with label ஆங்கிலம் அறிவோமே. Show all posts
Showing posts with label ஆங்கிலம் அறிவோமே. Show all posts
Thursday, 12 February 2015
Sunday, 8 February 2015
இம்ப்ரூவா, இம்ப்ரொவைஸா? :ஆங்கிலம் அறிவோமே - 42
முதலில் adjective என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம் (அல்லது வேகமாக ஒரு ரிவிஷன் செய்துவிடுவோம்).
Adjective என்பது ஒரு வார்த்தையை விளக்கும் பகுதி. அதாவது noun ஆக இருக்கும் ஒரு சொல் குறித்த விவரிப்பு இது.
It is a ---------- idea. கோடிட்ட இடத்தில் என்ன வார்த்தைகளையெல்லாம் பயன்படுத்துவீர்கள் என்று யோசியுங்கள்.
Good? Nice? Fabulous?
இப்படி எந்த வார்த்தையாக இருந்தாலும் அது adjective.
Truth என்பது noun. True என்பது adjective.
He speaks truth. This is a true statement.
Decency என்பது noun. Decent என்பது adjective.
Adjective என்பது அளவைக் குறிப்பதாகவும் இருக்கலாம். He spent all money
என்பதில் ‘all’ adjectiveதான். He spent no money என்றோ, He spent some
money என்றோ குறிப்பிட்டால் அந்த வாக்கியங்களில் உள்ள ‘no’ ‘some’ ஆகிய
வார்த்தைகள்கூட adjectivesதான்.
I ate two mangoes என்ற வாக்கியத்தில் mangoes என்ற noun-ஐ (எவ்வளவு
என்று) விவரிக்கிறது two என்ற வார்த்தை. இந்த விதத்தில் two என்பது
adjectiveதான்.
One, two, three போன்றவை numbers என்பது நமக்குத் தெரியும். ஆனால் first,
second, third போன்றவை numbers அல்ல. அவை ordinals. (எண்களை numbers என்று
மட்டுமல்ல cardinals என்றும் குறிப்பிடுவார்கள்).
Ordinalsகூட adjectiveதான் என்பதற்காக அதை இங்கு குறிப்பிட்டேன் The first
man to climb the Everest என்ற வாக்கியத்தில் ‘first’ என்பது adjective.
Man எனும் noun குறித்து அது (எத்தனையாவது மனிதன் என்று) விவரிக்கிறது.
இந்த இடத்தில் லேட்டாக வந்தாலும், லேட்டஸ்ட்டாகவும், சுவையாகவும் வந்துள்ள ஒரு வாசகர் கடிதத்தைக் குறிப்பிடுவதுதான் நியாயம்.
“What is your ordinal as a child to your parents?” இப்படிக்
குறிப்பிடலாமே என்கிறார் அவர். (“உன் பெற்றோருக்கு நீ எத்தனையாவது
குழந்தை?’’ என்பதற்கான மொழி பெயர்ப்பு இது என்பது உங்களுக்கு விளங்கி
இருக்கும்).
IMPROVE - IMPROVISE
தொலைக்காட்சி நடனப் போட்டிகளின் சில நடுவர்கள் “அடுத்த தடவை நிறைய
ப்ராக்டீஸ் செய்து நல்லா இம்ப்ரொவைஸ் செய்யணும்’’ என்ற ஒரு வாக்கியத்தை
அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இது சரியான பயன்பாடு அல்ல.
Improve என்பது வேறு. Improvise என்பது வேறு.
Improve என்பது முன்னேற்றம் காண்பது. அதாவது மேம்படுத்திக் கொள்வது. கொஞ்சம் திட்டமிட்டு இதைச் செய்ய வேண்டும்.
Improvise என்பது அந்த நொடியில் மேம்படுத்துவது. இதில் உடனடிச் செயல்பாடு
என்பது முக்கியம். சில பிரபல நகைச்சுவை நடிகர்கள் தங்கள் ஸ்க்ரிப்டில்
இல்லாத வசனங்களையெல்லாம் கூறிக் கைதட்டல் வாங்குவார்கள். அதாவது அந்த
நொடியில் அவர்கள் தங்களுக்குத் தோன்றியதைக் கூறி அந்தச் சூழலின் தன்மையை
மேம்படுத்துகிறார்கள். இப்படி உடனடியாகச் செய்யப்படும் மேம்பாடுதான்
Improvisation.
At? At the rate of?
@ என்பதன் பொருள் என்ன? இது எதற்காக மின்னஞ்சல்களில் தவறாமல் இடம் பெறவேண்டும்?
இந்தக் குறியீட்டை நெதர்லாந்தில் ‘குரங்கு வால்’ என்றும், இத்தாலியில்
‘நத்தை’ என்றும் அழைக்கிறார்கள். 1885-ல் இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட
தட்டச்சுக் கருவிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதற்கு முன்பு பல வருடங்களாகவே இடத்தைக் குறிக்க இது சுருக்கமாகப்
பயன்பட்டது. He lived @ Vellore என்பது போல. @ என்பதை எழுதும் நேரத்தில்
‘at’ என்றே எழுதியிருக்கலாமே, இதுவா சுருக்கம் என்கிறீர்களா? நியாயம்தான்.
ஆனால் தட்டச்சு செய்யும்போது ஒரு ஸ்பேஸ் குறைவதுகூடச் சில விஷயங்களுக்கு
மிகவும் வசதியாக இருக்கும்.
மின்னஞ்சல் முகவரி என்பது அந்தத் தகவல் எங்கே அளிக்கப்பட வேண்டும் என்பதைக்
குறிக்கிறது. முதன் முதலில் இந்த முறை கண்டுபிடிக்கப்ட்டபோது தகவல்
அனுப்புபவரின் முகவரி, தகவல் பெறுபவரின் முகவரி இரண்டுக்குமிடையே ஒரு
முக்கியமான வித்தியாசம் தேவைப்பட்டது. அதாவது பெறுபவரின் முகவரியிலுள்ள ஒரு
எழுத்து அனுப்புபவரின் முகவரியில் மிக நிச்சயமாக இருக்கக் கூடாது. இதற்கு
ஒரு தீர்வாகத்தான் @ மின்னஞ்சல்களில் அறிமுகமானது (ஏனென்றால் எண்களோ,
எழுத்துகளோ, நிறுத்தக் குறிகளோ அனுப்புபவரின் முகவரியில் இருக்க வாய்ப்பு
உண்டு).
@ குறியீட்டுக்குப் பின்னால் இருப்பது தகவல் பெறும் கணினியின் (Host
computer) பெயர். @ என்பதற்கு முன்னால் இருப்பது குறிப்பிட்டவரின் தனி
அடையாளம்.
தொடர்புக்கு: aruncharanya@gmail.com
அதுவாகவும் அதற்கு எதிரானதாகவும் -ஆங்கிலம் அறிவோமே 41
ஒரே வார்த்தை பல அர்த்தங்களைத் தருவதுண்டு. Book எனும் வார்த்தையும்
அவற்றில் ஒன்று. அதை புத்தகம் என்றும் Book me a ticket என்றும் சொல்லலாம்.
அதாவது கட்டணம் செலுத்தி அனுமதியை உறுதி செய்து கொள்ளலாம். கைது செய்வது
என்ற அர்த்தத்தில்கூட இது பயன்படுத்தப்படுகிறது. He was booked for murder.
இப்படி ஒரே வார்த்தை பல்வேறு அர்த்தங்களைத் தருவது இயல்புதான். ஆனால் அந்த
இரண்டு அர்த்தங்களும் ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை என்றால் அது பல
சிக்கல்களைக் கொடுக்கும் இல்லையா?
எதிர் அர்த்தமும்
“அவர் மாமியார் வீட்டுக்குப் போயிருக்கிறார்’’ என்று ஒருவரைப்பற்றிக்
கூறினால் “நியாயம்தானே. மனைவியின் பெற்றோர் வீட்டுக்குப் போவதில் என்ன
தப்பு இருக்கிறது” என்று நீங்கள் கருத்து தெரிவிக்கலாம். அல்லது “அடப்பாவி,
என்ன தப்பு செய்தானோ!’’ என்று ஆதங்கப்படலாம்.
மாமியார் வீடு என்ற வார்த்தைகள் மரியாதை அளிக்கும் இடம், மரியாதையை நீக்கும் இடம் ஆகிய இரண்டையுமே குறிக்கிறது.
ஆங்கிலத்திலும் இப்படிப்பட்ட நேரெதிர் பொருள் கொண்ட வார்த்தைகள் உண்டு. இவற்றை contronym என்பார்கள்.
Buckle என்றால் இணை என்றும் அர்த்தம் உண்டு. பிரிதல் அல்லது உருவிழத்தல்
என்றும் அர்த்தம் உண்டு. Buckle the shoes. He buckled under pressure.
Custom என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றையும் குறிக்கும். ஸ்பெஷலான
ஒன்றையும் குறிக்கும். This is an ancient custom. This is a customized
shoe.
Dust என்பது தூசியைக் குறிக்கிறது. ஆனால் ஒருவரைப் பார்த்து “Dust’’ என்று வேலை ஏவினால் அந்த dust தூசியை நீக்குதலைக் குறிக்கிறது.
சாதகமும், பாதகமும்
First Degree என்றால் அது மிக லகுவானதா? அல்லது மிகக் கடுமையானதா?
இரண்டும்தான்! First Degree murder என்றால் அது மிகக் கடுமையான விதத்தில்
செய்யப்பட்ட கொலை. First Degree burns என்றால் அவை மேம்போக்கான
தீக்காயங்கள். சிகிச்சையில் சரி செய்து விடலாம்.
Overlook என்றால் மேற்பார்வையிடுவது என்றும் அர்த்தம். மேற்பார்வையிடாமல் கவனிக்கத் தவறுவது என்றும் அர்த்தம்.
Fast என்றால் என்ன பொருள்? (விரதம் என்கிற அர்த்தத்தை விட்டுவிடவும்).
வேகமாக என்பதுதானே அர்த்தம் என்கிறீர்களா? அப்படியானால் ‘Holding fast’
என்ற வார்த்தைகள் அசையாமல் இருப்பதையல்லவா குறிக்கிறது?
Off என்றால் என்ன பொருள் என்று கேட்டால் நீங்கள் Off ஆகிவிடமாட்டீர்கள்.
Deactivated என்பதுதான் இதற்கான அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியும்.
ஆனால் ‘The alarm went off’ எனும்போது அந்த அலாரம் செயல்படுகிறது (Activate
ஆகிறது) என்றுதான் அர்த்தம்.
Handicap என்பதை சாதகம், பாதகம் ஆகிய இரண்டையுமே குறிக்கும் வகையில் பயன்படுத்த முடியும்.
“அவர் வயதானவர் என்பதால் Handicap அளிக்கப்பட்டது’’ எனும்போது சமத்துவத்தை
நிலைநாட்ட அவருக்குச் சாதகமான ஒரு விஷயம் செயல்படுத்தப்பட்டது என்று
அர்த்தம். “தனது Handicap காரணமாகவே அவரால் வெற்றியடைய முடியவில்லை’’
எனும்போது Handicap என்பது ஒரு பாதகமாக விவரிக்கப்படுகிறது.
Quantum என்பதற்குப் பொருள் கணிசமாகப் பெரிய அளவில் இருப்பதுதான். ஆனால்
அறிவியல் அறிஞர்களைக் கேட்டால் அது மிகமிகச் சிறிய பகுதியைக் குறிக்கும்
ஒரு சொல் என்றும் சொல்வார்கள்.
Left என்றால் பாக்கி இருப்பதா அல்லது வெளியேறிவிட்டதா? அடுத்து வரும்
வாக்கியத்தில் எந்த Left எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைப்
பாருங்கள். Pakistanis have left and Indians are left.
PSEUDO
வாசகர் ஒருவர் “Faux populi’’ என்று அவ்வப்போது நாளிதழ்களில் படிக்கிறேன். இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருக்கிறார்?
அது “Vox populi”. இதன் பொருள் மக்களின் குரல் (voice of people).
“Vox pop” என்றால் சாதாரண மனிதன் (R.K.லக்ஷ்மணனின் கார்ட்டூன் கதாபாத்திரம்
நினைவுக்கு வருகிறதா?).நண்பர் faux என்ற வார்த்தையைப் பயன்படுத்தி
இருக்கிறார்.
“Vox populiக்கு’’ மட்டுமே மிக மதிப்பளிப்பதாகப் பல அரசியல் வாதிகள் கூறுவதே ஒரு faux செயல்தான்.
Faux மற்றும் pseudo ஆகிய இரண்டு வார்த்கைளுக்குமே “பொய்யான’’ என்ற பொதுவான அர்த்தமும் உண்டு. Faux என்பது பிரெஞ்ச் வார்த்தை.
Faux pearls என்றால் செயற்கை முத்துகள். Faux concern என்றால் செயற்கை அக்கறை.
Pseudo என்றால் உண்மையற்ற என்று அர்த்தம்.
Pseudo என்பது கிரேக்க வார்த்தை. ஆங்கிலம் இதை அப்படியே எடுத்துக் கொண்டிருக்கிறது.
Pseudonym என்றால் புனை பெயர்.Pseudonym என்ற வார்த்தைக்கு நேர்மையற்ற என்ற
அர்த்தமும் உண்டு. Bogus, insincere என்று சொல்லலாம். ஒருவர்
அப்படியொன்றும் அறிவாளியாக இல்லாதபோதும்தான் ஒரு பெரும் அறிவாளி என்பதுபோல்
எண்ணி நடந்துகொண்டால் அவரை pseudo intellectual என்பதுண்டு.
Bona fide Certificate என்று கேள்விப்பட்டிருப்போம். Bona fide என்பது
pseudo அல்லது Faux ஆகியவற்றுக்கு எதிர் பொருளைத் தரக்கூடியது. Bona fide
என்றால் நேர்மையான அல்லது நன்னம்பிக்கையில் என்று பொருள். In spite of her
simplicity, it is clear that she is a bona fide expert in her field. The
Judge assumed that he has acted bona fide.
பெற்றால்தான் பிள்ளையா - இதற்கான ஆங்கில மொழி பெயர்ப்பை “Should one be a
biological Parent?” என்று சரியாகவே (அதாவது எனக்குத் தோன்றியபடியே!) மொழி
பெயர்த்திருக்கிறார் ஒரு வாசகர். அதன் முழுஅர்த்தமும் வெளிப்பட
வேண்டுமென்றால் “Should one be a biological parent to provide parental
care?” எனலாம்.
தொடர்புக்கு:
aruncharanya@gmail.com
தன் விவரமா, வாழ்க்கைப் போக்கா? - ஆங்கிலம் அறிவோமே
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களைப் பற்றி “அவர் ரொம்ப shrewd’’ என்று
பேசிக் கொள்கிறார்களா? அப்படியானால் நீங்கள் பாராட்டப்படுகிறீர்கள்
என்றுதான் அர்த்தம். உங்களுக்கு நிறைய presence of mind இருக்கிறது.
புத்திசாலித்தனம், விழிப்புணர்வு இரண்டும் கொண்டவர் நீங்கள்.
ஆனால் நீங்கள் ஒரு பெண்மணியாக இருந்து யாராவது உங்களை shrew என்று கூறினால்
(முன்பு குறிப்பிட்ட வார்த்தையின் கடைசி எழுத்து இல்லை என்பதைக்
கவனியுங்கள்) “ரொம்ப தாங்க்ஸ்’’ என்று அசட்டுத்தனமாகச் சொல்லி விடாதீர்கள்.
அது எதிர்மறை அர்த்தத்தை அளிக்கும் வார்த்தை. கொஞ்சம் ராட்சசத்தனமான,
எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் பெண்மணியைத்தான் shrew என்பார்கள்.
Shrewd, shrew ஆகிய வார்த்தைகளைக் குறிப்பிடும்போது விநாயகரின் வாகனமும்
நினைவுக்கு வருகிறது. ஏன் என்பதைக் கூற முடியுமா? விடையைப் பிறகு உறுதி
செய்து கொள்ளலாம்.
வித்தியாசம்
இளைஞர்கள் பலருக்கும் ஏதோ ஒரு கட்டத்தில் உண்டாகி இருக்கக் கூடிய ஒரு
சந்தேகம் இது. Bio-data, C.V, Resume ஆகிய மூன்றும் ஒன்றுதானா?
அப்படியில்லை என்றால் அவற்றுக்கிடையே என்ன வித்தியாசம்?
Bio-data என்பது Biographical data என்பதன் சுருக்கம். இதில் தன்னைப்
பற்றிய விவரங்களை ஒருவர் பதிவுசெய்து கொள்வார். பெயர், முகவரி, வயது,
பிறந்த தேதி, நாடு போன்ற விவரங்களும் இவற்றைத் தொடர்ந்து கல்வி மற்றும் பணி
தகுதிகள் ஆகியவை வருட வாரியாகவும் இடம் பெறும். ரேஷன் அட்டைக்கு
விண்ணப்பிக்க, ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக்க நாம் அளிப்பதெல்லாம்
bio-dataதான். என்ன, அச்சிட்ட தாள்களில் தேவைப்படும் விவரங்களைக்
கேட்கிறார்கள், நிரப்புகிறோம், அவ்வளவுதான்.
C.V என்பதன் விரிவு Curriculum Vitae. இவை லத்தீன் வார்த்தைகள். “வாழ்க்கைப் போக்கு’’ (Course of life) என்பது இதன் பொருள்.
Resume என்பது ஒரு பிரெஞ்ச் வார்த்தை. இதன் பொருள் summary என்பதாகும்.
பொதுவாக C.V என்பதும் Resume என்பதும் ஒன்றுதான். ஆனால் சிறுசிறு வேறுபாடுகள் உண்டு.
Resume என்பது அதிகபட்சம் இரண்டு பக்கங்கள் கொண்டதாக இருக்கும். இதிலுள்ள
குறிப்புகள் ஏதோ மூன்றாவது மனிதரைப்பற்றி விவரிப்பதுபோல் இருக்கும். (Has
secured first rank, Has participated in the cultural events என்பதுபோல).
C.V என்பது தேவைக்கேற்ப அதிகப் பக்கங்களைக் கொண்டதாக அமையலாம். நான்கு
பக்கங்கள்கூட இருக்கலாம். கல்வி, பணி அனுபவங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட
வரிசையில் விவரிக்கப்படும்.
எப்போது C.V.? எப்போது Resume?
C.V என்பது உங்களைப் பற்றிய பொதுவான கருத்தை உருவாக்கப் பயன்படுகிறது.
Resume என்பது குறிப்பிட்ட வேலைக்கு நீங்கள் எவ்வளவு தகுதியானவர் என்பதை
உணர்த்தும் முயற்சி.
வீட்டிலும் சிங்கம்
விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. மூஞ்சூறுக்கு ஆங்கிலத்தில் என்ன வார்த்தை?
Shrew என்பதுதான். (Rat, Mouse ஆகியவை எலியைக் குறிக்கின்றன).
பெருச்சாளிக்கு ஆங்கிலத்தில் என்ன? கார்ட்டூனில் பார்த்துத் தெரிந்து கொள்ளவும்.
கார்ட்டூனுக்கான ஐடியாவை உருவாக்கியபோது நான் படித்த ஒரு ஜோக் நினைவுக்கு
வந்தது. அதைக் கொஞ்சம் மாற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேனே.
தன் அலுவலகச் சகாக்களிடம் ஒருவர் “நான் valiant, valorous, intrepid,
audacious’’ என்றாராம். அதைக் கேட்ட ஒருவர், “சார் நீங்க ஆபீஸிலே
சிங்கம்தான், வீட்ல எப்படி?’’ என்றாராம். அதற்கு அவர் “வீட்டிலும் நான்
சிங்கம்தான்’’ என்று கூறிவிட்டு ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு “ஆனால் என்
மனைவி துர்க்கை. என்மேலே உட்கார்ந்து அதிகாரம் பண்ணுவாங்க’’ என்றாராம்.
(அவர் தன்னைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டுக்கொண்ட நான்கு ஆங்கில
வார்த்தைகளும் துணிவைக் குறிக்கின்றன என்பதை இந்நேரம் நீங்களே புரிந்து
கொண்டிருப்பீர்கள்).
சிவபெருமானின் வாகனம் எது? உங்கள் விடையை ஆங்கிலத்தில் கூற வேண்டும்..
பசுவும் எருமையும்
அதற்கு முன்னால் Cow என்றால் என்ன? Buffalo என்றால் என்ன? Ox என்றால் என்ன?
Bull என்றால் என்ன? Bullock என்றால் என்ன? சொல்லுங்கள். (இப்போது
சிலருக்குச் சின்னதாக ஒரு குழப்பம் வந்திருக்கலாம் கடைசி மூன்றில் எது
சிவனின் வாகனம் என்று).
முதலில் cow என்றால் எது என்பதைத் தெரிந்து கொண்டுவிடுவோம். இதென்ன
அசட்டுத்தனம், cow என்றால் பசுமாடுதானே என்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம்.
வளர்ச்சி முழுமையடைந்துவிட்ட பல பெரிய பெண் விலங்குகளை cow என்று
குறிப்பிடுவதுண்டு. வளர்ச்சியடைந்த பெண் யானை, பெண் திமிங்கிலம்
ஆகியவற்றையும்கூட cow என்பதுண்டு. சந்தேகம் எதற்கு என்பதற்காக cow
elephant, cow whale என்றும் சிலர் கூறுவார்கள்.
Buffalo என்றால் எருமை.
எருது என்றால் என்ன? உங்கள் பதில் Ox என்பதா? Bull என்பதா? அல்லது இரண்டு
வார்த்தைகளும் சரிதான் என்பதா? (குழப்பம் அடைபவர்கள் கவலைப்பட வேண்டாம்.
சின்ன வயதில் எருமையை ஆண் என்றும் பசுவைப் பெண் என்றும் அப்பாவித்தனமாக
எண்ணியவர்கள் உண்டு. அப்படிக் கூடவா இருப்பார்கள் என்று கேட்காதீர்கள்.
Ox என்றால் மாடு. மாட்டு வண்டியில் பூட்டப்படுவது oxதான். (Ox என்பதன்
பன்மை Oxen). ஆஸ்திரேலியாவில் (இந்தியாவிலும் கூடத்தான்) இதை bullock
என்பார்கள். Bullock cart என்றால் மாட்டு வண்டி. நிலத்தை உழப் பயன்படும்
எருது என்பதும் oxதான்.
பெரும்பாலும் ox எனும் விலங்கின் இனப்பெருக்கச் சக்தியை மருத்துவத்தின்
மூலம் நீக்கிவிடுவது வழக்கம். அப்போதுதான் அவற்றைக் கட்டுப்பாட்டில்
வைத்துக் கொள்ள முடியுமாம்.
Bull என்பது காளை. Bison என்றும் கூறுவார்கள். ஸ்பெயினில் புகழ்பெற்ற Bull
fighting என்ற விளையாட்டு நினைவுக்கு வருகிறதா? ஜல்லிக்கட்டும்தான். ஆகச்
சிவனின் வாகனம் bullதான்.
இன்னமும் விளங்காதவர்கள் ‘ஆ’ என அலறலாம். அல்லது ‘கோ’ என்று கண்ணீர்
விடலாம். ஆனால் ஆ, கோ என்ற தமிழ் வார்த்தைகள் பசுவை மட்டும் குறிக்கிறதா?
அல்லது பால் தரும் விலங்கு எதையும் குறிக்கிறதா என்று கேட்டுவிடாதீர்கள்.
தொடர்புக்கு:
aruncharanya@gmail.com
Saturday, 27 December 2014
ஐ லவ் யூவா, ஐ எம் லவ்விங் யூவா? - ஜி.எஸ்.சுப்ரமணியன் - தி இந்து
ஒரு வாசகர் “I play cricket” என்பதற்கும் “I am playing cricket”
என்பதற்கும் அர்த்தத்தில் என்ன வித்தியாசம் என்று கேட்டிருக்கிறார்.
இதற்கான விளக்கம் வேறு பல தவறுகளைக்கூடச் சரி செய்யும் வாய்ப்பை அளிக்கக்
கூடும்.
“I play cricket” என்பது present tense. (சிலர் இதை simple present tense என்றும் கூறுவார்கள்).
“I am playing cricket” என்பது present continuous tense.
இரண்டு வாக்கியங்களும் வெவ்வேறு அர்த்தம் கொண்டவை. “I am playing cricket”
என்று நீங்கள் சொன்னால் கிரிக்கெட் மட்டையும் கையுமாக (அல்லது கிரிக்கெட்
பந்தும் கையுமாக) அதைச் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது இதைச்
சொல்லும் நொடியில் நீங்கள் அந்தச் செயலைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்.
“I play cricket” என்றால் நீங்கள் கிரிக்கெட் ஆடும் பழக்கம் கொண்டவர் என்று அர்த்தம், அவ்வளவுதான்.
இதையே வேறு மாதிரிச் சொல்லலாம். “I am living in London” என்றால் நீங்கள்
இப்போதும் அங்கு வசிக்கிறீர்கள், அங்கிருந்தபடி இதைச் சொல்கிறீர்கள்.
“I live in London” என்று நீங்கள் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்கு வரும்போதுகூடக் கூறலாம்.
பொதுவாக (மேற்படி குழப்பம் வேண்டாமே என்பதற்காகவோ என்னவோ) present tense
verbக்கு முன்பாக always, often போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.
கீழே உள்ள வாக்கியங்களை நன்கு கவனியுங்கள்.
He always likes her presence.
Malathi frequently visits her home town.
He often comes with us here.
It occasionally rains in summer.
I rarely ask for help.
We never visit this hospital.
Present continuous tense என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பதற்கும்
நாம் சில கூடுதல் வார்த்தைகளைப் பயன்படுத்துவ துண்டு. இதோ சில உதாரணங்கள்.
What are you doing now?
I think you are eating a lot nowadays.
I am speaking to you, at the moment.
வருங்காலத்தில் விரைவிலேயே நடக்கவிருப்பதைக் குறிக்கும்போதும் Present continuous tense ஐப் பயன் படுத்தலாம்.
இரண்டு உதாரணங்கள் இதோ.
I am going to a movie tonight. My uncle is arriving tomorrow.
Amoral – Immoral – Immortal
Moral என்பது ஒழுக்கநெறி தொடர்பான ஒரு வார்த்தை. Moral story என்றால் அந்தக் கதையில் ஒழுக்கம் போதிக்கப்படுகிறது என்று அர்த்தம்.
அதற்காக amoral என்றால் அதற்கு எதிர்ச்சொல் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது.
ஒழுக்கநெறிக்குத் தொடர்பில்லாதது (எதிரானது அல்ல) என்று கூறலாம்.
Mathematics is an amoral subject.
ஆனால், immoral என்பது, moral என்பதன் எதிர்ச்சொல். Cheating, stealing, lying are immoral acts.
Moral என்பது வேறு. Mortal என்பது வேறு. Mortal என்றால் இறப்பு நேரக்கூடிய
என்று அர்த்தம். Immortal என்றால் இறப்பில்லாதது என்று அர்த்தம். All human
beings are mortal. No one is immortal.
இரு ஆங்கில இதழ்களின் பெயர்கள் குறித்து ஒரு சந்தேகம் வந்திருக்கிறது ஒரு வாசகருக்கு.
“அது ஏன் Readers’ Digest? அப்படியானால் எதற்கு Women’s Era?’’ என்று ரத்னச் சுருக்கமாகக் கேட்டிருக்கிறார்.
Readers என்பது பன்மை. அதனால் அதற்குப் பிறகு apostrophe வந்திருக்கிறது. (Reader என்பதற்குப் பிறகு அந்த நிறுத்தக் குறி வந்திருந்தால், அது ஏதோ ஒரு வாசகருக்கானது
என்றாகிவிடும்). Women என்பதே பன்மை என்பதனால், அதைத் தொடர்ந்து அந்த
நிறுத்தக் குறி இடம்பெற்றிருக்கிறது.
Parents’ Day. Valentine’s Day. இந்த இரண்டையும் கவனித்துப் பார்த்தால் நான் சொல்ல வந்தது மேலும் தெளிவாகவே விளங்கும்.
உதவி கிடைச்சா பயப்படுவாங்களா? - ஜி.எஸ்.சுப்ரமணியன் - தி இந்து
ஒரு வாசகர் “தவறு இழைக்கும் நாடுகளுக்கு எதிராக economic sanctions-ஐ பிற
நாடுகள் செயல்படுத்த வேண்டும் என்கிறார்களே. இது அந்த நாடுகளுக்கு
நல்லதுதானே. எனக்குப் புரியவில்லை’’ என்று ஆச்சரியப்படுகிறார்.
ஆச்சரியம் வேண்டாம் நண்பரே. இது ஒன்றும் “இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்துவிடல்’’ வகையான ஆலோசனை அல்ல. Sanction என்பதற்கும்,
sanctions என்பதற்கும் பெரும் வித்தியாசம் உண்டு.
அனுமதியும் தடையும்
Sanction என்றால் அனுமதித்தல். I hereby sanction you the ten days leave
requested என்பதுபோல. இதே அர்த்தத்தில் அதன் பன்மையாகவும் சில சமயம்
sanctions என்பது பயன்படுத்தப்படுவது உண்டு.
ஆனால் sanctions என்பதற்கு மற்றொரு முக்கிய அர்த்தம் உண்டு. சட்டத்தையோ,
நல்லொழுக்கத்தையோ பின்பற்றாதவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையையும்
அப்படிச் சொல்வதுண்டு. அதாவது penalty, deterrent என்று இதற்குப் பொருள்
கொள்ளலாம். ஒரு நாட்டின் மீது பிற நாடுகள் economic sanctions-ஐ
விதிக்கின்றன என்றால் அந்த நாட்டுடனான வணிக உறவுகளைத் துண்டித்துக்
கொள்கின்றன என்று அர்த்தம். இதனால் அந்த நாட்டுக்குப் பொருளாதார இழப்பு.
அரசியல்ரீதியான எதிர்ப்பைச் சமாளிக்கும் நாடுகள்கூட பிற நாடுகளின் economic
sanctions-ஐ சமாளிப்பது கஷ்டம்.
பாதிப்பும் நஷ்டஈடும்
இதுபோலத்தான் Damage, Damages ஆகிய வார்த்தைகளுக்கிடையே உள்ள வேறுபாடு.
Damage என்றால் பாதிப்பு. The property was damaged by the cyclone. சில
சமயம் இதைப் பன்மையில் damages என்று குறிப்பிடுவதுண்டு.
ஆனால் damages என்றால் நஷ்டஈடு என்பது பொதுவான அர்த்தம். ஒரு நீதிபதி “I
hereby order Mr.X to pay Mr.Y damages of Rupees one lakh” என்று கூறலாம்.
ஆக S சேர்த்ததில் அர்த்தமே மாறிவிட்டது.
இது CARDIOLOGY பிரிவு!
ஆங்கில நாவல் ஒன்றில் “Set the heart at rest’’ என்று ஒரு நண்பர்
படித்தாராம். “இதற்கு அர்த்தம் என்ன?’’ என்று கேட்டுள்ளார். இது கொலை
அல்லது தற்கொலையைக் குறிக்கிறதா என்றும் கேட்டிருக்கிறார். உடனடியாக I
should set his heart at rest. பதற்றம் வேண்டாம் நண்பரே.
கவலையில்லாமல் (அதாவது கவலையைப் போக்கும் விதத்தில்) செய்வதுதான் “setting
the heart at rest’’. This letter will set your heart at rest.
இதயம் தொடர்பான வேறு பல சுவாரஸ்யமான விஷயங்களையும் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது.
“The house was after my heart’’ என்றால் எனக்கு எது போன்ற வீடு வேண்டுமென்று நினைத்தேனோ, அது போலவே இருக்கிறது என்று அர்த்தம்.
The death of my uncle broke my heart என்றால் தாங்க முடியாத துயரத்தை அந்த இறப்பு அளித்தது என்று அர்த்தம்.
From the bottom of my heart என்றால் மிகவும் உண்மையாக என்று பொருள். I thank everyone from the bottom of my heart.
Heart of hearts என்றால் மனதின் ஆழத்தில் என்று அர்த்தம். In my heart of hearts, I consider this death to be a murder.
Have one’s heart in one’s boots என்றால் மிகவும் கவலையுடன் இருப்பது. அதாவது depressed.
Embrace - Embarrass
Embrace என்றால் தழுவுதல்.
I embraced my friend after he won the tournament.
தழுவுதல் என்பதை உருவகமாகவும் பயன்படுத்துவதுண்டு.
அம்பேத்கார் புத்த மதத்தைத் தழுவினார் என்பதை Ambedkar embraced Buddism எனலாம்.
Embarrass என்பது ஒருவிதச் சங்கட உணர்ச்சியைக் குறிக்கிறது. அதாவது
தற்செயலாக நடந்துவிடும் ஒன்று. மீதி பேருக்கு இது தெரியாமல் இருந்தால்
நன்றாக இருக்குமே என்று நினைக்கக் கூடிய ஒன்று. இதன் மூலம் கொஞ்சம் அவமானம்
நேரலாம் எனும்படியான விஷயம்.
He felt embarrassed, upon falling down on this stage before a huge audience. Never feel embarrassed to admit your weaknesses.
இந்த வார்த்தைகளின் வித்தியாசத்தைப் புரிந்துகொண்டவர்கள் “நீ என்னைச்
சங்கடப்படுத்துகிறாய்’’ என்று காதலி ஆங்கிலத்தில் கூறும்போது, கைகளை
முன்புறம் விரித்தபடி பரவசத்துடன் அவளை நோக்கி முன்னேற மாட்டார்கள்.
Subscribe to:
Posts (Atom)




