Blogger news

Showing posts with label பயனுள்ள தகவல்கள். Show all posts
Showing posts with label பயனுள்ள தகவல்கள். Show all posts

Sunday, 8 February 2015

பாடங்களை இனிக்கவைக்கும் கற்பனைச் சுற்றுலா! - கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி

வாழ்க்கையில் மனதுக்குப் பிடித்தமான விஷயங்கள் நடந்துவிட்டால், உள்ளம் கொண்டாடும். விருப்பம் இல்லாத விஷயத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், மனதில் குழப்பங்கள் மூளும். இது அடிப்படை உளவியல். படிப்பை நீங்கள் பிடித்தமான விஷயமாக நினைத்தால் இந்த குழப்பங்கள் இல்லை. இதற்கு ஒரு சுலபமான, எளிமையான தீர்வு உள்ளது.
உங்கள் படிப்பைப் பற்றிய நேர்மறை கற்பனை உலகுக்கு அடிக்கடி ஓர் இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதற்கு பணம் தேவையில்லை. நண்பர்களும் தேவையில்லை. உளவியலில் இதை ‘மென்டல் டூர்’ (Mental Tour) என்பார்கள். அதாவது, நன்றாக படித்து, நிறைய மதிப்பெண்கள் பெற்று, உங்களுக்குப் பிடித்தமான துறையில் பிடித்தமான வேலையில் இருக்கிறீர்கள். அல்லது சுயதொழிலில் பெரிய அளவில் சாதனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட கற்பனை உலகில் அடிக்கடி உலவுங்கள். பின்பு படித்தால், எந்த பாடமும் பனங்கற்கண்டாக இனிக்கும். இது உளவியல் உண்மை!
தேர்வு காலத்தில் காலடி எடுத்து வைத்துள்ள மாணவர்கள் கண் விழித்துப் படித்துவிட்டு, படுக்கைக்குச் சென்றவுடன் ‘உடனே தூக்கம் வராதா’ என ஏங்குவர். ஏனெனில் அல்ஜீப்ராவும் கெமிஸ்ட்ரி பார்முலாக்களும் மூடிய கண்களுக்குள் அவ்வப்போது வந்து மன இறுக்கத்தை ஏற்படுத்தும். எனவே, சூத்திரம் மனப்பாடம் செய்வதை, படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்பாக நிறுத்திக்கொள்ளவும்.
நல்ல மதிப்பெண் மூலமாகவே தரமான கல்லூரியில், விரும்பிய மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இது உண்மைதான். அதே நேரம், மன அழுத்தத்துக்கான முக்கியக் காரணமும் இதுதான். ‘மதிப்பெண் குறைந்தால் டாப்10 கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ’ என்ற அச்சம் இப்போது தேவையில்லாத ஒன்று. டாப் 10 கல்லூரிகள் என்பதில் வணிகம் உட்பட பல்வேறு சூட்சுமங்கள் இருக்கின்றன. அதற்குள் விரிவாக செல்லத் தேவையில்லை. உண்மையில் இங்கு டாப் 100 கல்லூரிகள் உள்ளன. அதில் சேர்ந்து திறமையை நிரூபிப்போம் என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்ளுங்கள்.
மன அழுத்தத்துடன் தேர்வு எழுதச் செல்பவர்கள், கவனக்குறைவுக்கு ஆட்பட்டு சிறு பிழைகளை செய்து அதிக மதிப்பெண்களை இழக்கின்றனர். இதை ஒவ்வோர் ஆண்டும் கண்கூடாகப் பார்த்துவருகிறேன். குறிப்பாக சிலருக்கு, கடந்த ஓராண்டாக இல்லாத மன அழுத்தம் திடீரென தேர்வுக்கு ஒரு மாதம் முன்பாக தொற்றிக்கொள்ளும். பதற்றம் அதிகரிக்கும். இதயம் வேகமாக துடிக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் வியர்க்கும். உடல் சூடாகி லேசான காய்ச்சல் போல உணர்வார்கள். பார்வையும்கூட லேசாக மங்கும். நாக்கு வறளும். படித்தது மொத்தமும் மறந்துபோகும். ஆண்டுக்கு 10 மாணவர்களை இப்படி சந்திக்கிறேன். தவறு மாணவர்கள் மீது அல்ல. அதிகமான அழுத்தத்தை, எதிர்கால பாரத்தை ஓராண்டாக அவர்கள் மேல் சுமத்தியவர்கள் மீதுதான் தவறு.
இதுபோன்ற சூழலில், மாணவர்கள் பயப்படக்கூடாது. பதற்றம் ஏற்பட்டால் எல்லோருக்குமே உடலில் அட்ரீனல், கார்டிசால் ஆகிய ஹார்மோன்கள் சுரப்பது வழக்கம். அவை சுரப்பதால் ஏற்படும் உடலியல் ரீதியான பிரச்சினைகள்தான் உங்களுக்கும் ஏற்படுகின்றன. உங்களுக்குத் தெரிந்த மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் பெறுவதன் மூலம் ஓரிரு நாட்களில் வெகு சுலபமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
எதிர்காலத்தை நன்கு திட்டமிட்டு, லட்சியத்தை அடையும் நோக்கத்துடன் நடந்தால் வீண் குழப்பங்கள், பதற்றம், அச்சம் ஆகிய அனைத்தையுமே தவிர்க்கலாம். அவசரமாக படிப்பது, புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்வது, தெரியாத வினா-விடையையே நினைத்துக்கொண்டு இருப்பது, பாடத்திட்டத்தை விட்டு வெளியே இருந்து கேள்வி வருமா என சந்தேகம் கொள்வது ஆகிய வீண் சந்தேகங்கள், குழப்பங்களை தவிர்க்க வேண்டும். இவையும் மன அழுத்தத்துக்கு முக்கியக் காரணிகள்.
அதேபோல, மாணவர்கள் பெரும்பாலும் ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண் கேள்விகளில் சிறு தவறு செய்கின்றனர். இவர்கள் என்னிடம் வந்து, ‘நன்றாக தெரிந்த பதில். எப்படி தவறு செய்தேன் என்றே தெரியவில்லை’ என்பார்கள். காரணம், மன அழுத்தம் மட்டுமே. எனவே, தங்கள் பிள்ளையை மன அழுத்தம் வாட்டுகிறதா என்பதைக் கண்டறிவது பெற்றோரின் முக்கியக் கடமை.
மாணவர்கள் பெரும்பாலும் இடத்தை விட்டு நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கிறார்கள். அதை தவிர்க்கலாம். வீட்டிலேயே மாடியில் சில மணி நேரம் படிக்கலாம். தோட்டம் இருந்தால் அங்கு சிறிது நேரம் படிக்கலாம். பாதுகாப்பான, கவனத்தை சிதறடிக்காத பூங்காக்கள் அருகில் இருந்தால், அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை எல்லாம் படிப்பு தொடர்பான மன அழுத்தங்களைப் போக்கும் உத்திகள். எங்கு படித்தாலும், அக்கம்பக்கத்தில் வேடிக்கை பார்க்காமல் உங்கள் கவனம் படிப்பில் மட்டுமே இருக்கவேண்டும்.
ஒரே பணியில் வெகு நேரம் கவனம் செலுத்துவது கடினம் என்பதால் மனதை மாற்றுச் சூழலுக்கு கொண்டு செல்வது மனதை சமநிலைப்படுத்தும். மனச் சமநிலையுடன் படிக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்த்துக்கள்!
இவை எல்லாம் முக்கியம்..
# வினா வங்கி மற்றும் பாடப் புத்தகத்தில் இருந்தே 80 சதவீத கேள்விகள் கேட்கப்படுவதால், அதை நன்றாக படித்து வைத்துக்கொள்ளுங்கள்.
# நன்றாக படித்த பாடங்களை ஒருமுறைக்கு 2 முறை எழுதிப் பாருங்கள். 20 நிமிடம் படித்தால், 10 நிமிடம் அதை எழுதவேண்டும்.
# மாதிரி தேர்வில் செய்த தவறுகளை பட்டியலிட்டு, அதில் செய்யவேண்டிய திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். மாதிரி தேர்வில் சாய்ஸில் விட்ட கேள்விகளை அக்கறை எடுத்துப் படித்து, எழுதிப் பாருங்கள்.
# வகுப்பில் எழாத பாட சந்தேகங்கள், படிக்கும்போது எழலாம். உடனே ஆசிரியரை அணுகி தீர்வு காணுங்கள்.
# எல்லாவற்றையும்விட முக்கியம்.. படிப்பையும் தேர்வையும் தாண்டி மிகப் பெரிய உலகம் ஒன்று இருக்கிறது. அதை மனதில் நிலைநிறுத்துங்கள். வெற்றி உங்களுக்கே!

சாதிகளற்ற சமத்துவம் தேவை - இராம. பரணீதரன்

இந்தியா போன்ற பல்வேறு மொழி, கலாசாரம், பண்பாடு உடைய மதச்சார்பற்ற நாட்டில் அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகளும், கலவரங்களும் ஏற்படுவது வழக்கம்தான்.
இதுபோன்ற பிரச்னைகள் நம்நாடு சுதந்திரமடைவதற்கு முன்பே தொடங்கிவிட்டன. இவற்றிற்கு முக்கியக் காரணம் ஒற்றுமையின்மையே.
காலங்கள் மாறினாலும், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றாலும், இந்த ஒற்றுமையின்மை மட்டும் இன்றுவரை அப்படியே தொடர்கிறது. மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் என்று எங்கும் ஒற்றுமை இருப்பதில்லை.
குறிப்பாக, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு மிகவும் குறைவு. அதனால்தான் சாதிக் கலவரங்களும், மதக் கலவரங்களும், பழிக்குப்பழியாகக் கொலைகளும் நடைபெற்று தமிழகத்தில் அவ்வப்போது ரத்த ஆறு ஓடுகிறது.
ஜாதி, மத மோதல்களைத் தடுக்க அரசு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும், அரசால் முழுமையாகத் தடுக்க இயலவில்லை.
ஏனெனில், இங்குள்ள மக்களின் மனதில் சாதியக் கோட்பாடுகள்  ஆழமாக வேரூன்றிவிட்டன. அவற்றை அகற்றுவது எளிதானதல்ல.
10 வருடங்களுக்கு முன்பு எனது மாணவன் ஒருவன், தேர்வுத் தாளில் தன் பெயரோடு தன் ஜாதியின் பெயரையும் இணைத்து எழுதியிருந்தான்.
இதுகுறித்து, நான் அவனை அழைத்துக் கேட்டபோது, தன் பெயரே அதுதான் என வாதிட்டான். நான் "வருகைப் பதிவேட்டில் பெயர் எவ்வாறு உள்ளதோ அப்படித்தான் பெயரை எழுதவேண்டும்' என அறிவுறுத்தினேன்.
அதற்கு அந்த மாணவன் கூறிய பதில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "சார், எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே எங்க ஊர் திருவிழா, திருமண விழா என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் போஸ்டர், பேனரில் என் பெயரை இப்படித்தான் போடுவோம்' என்றான்.
குழந்தைகளின் பிஞ்சு நெஞ்சிலேயே ஜாதி எனும் விஷ விதை தூவப்படுகிறது. இது, குழந்தையோடு சேர்ந்து வளர்ந்து, வாலிப பருவத்தில் தன் வீரியத்தை ஜாதி மோதலாகவோ, கலவரமாகவோ காட்டிவிடுகிறது. இது இன்று நேற்றல்ல, காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஒரு காதல் விவகாரம் இரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சமூகத்தினரிடையே மிகப் பெரிய பிரச்னையாக மாறி பல உயிர்களைப் பலி வாங்கியதோடு, பெரும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.
பிரச்னையின் இத்தகைய தீவிரப் போக்குக்கு ஒரு சில தலைவர்களும் காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.
மக்களிடையே ஜாதித் தீயை மூட்டிவிட்டு, அதில் குளிர் காய்பவர்களே இன்று அதிகமாக உள்ளனர். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களை, தங்கள் ஜாதிக்காரர், தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் என முத்திரை குத்தி, அந்தத் தலைவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதன் மூலம், தேசியத் தலைவர்களை ஜாதியத் தலைவர்களாக மாற்றிவிடுகின்றனர்.
இதேபோல், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தேசியத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் வரும்போது, சில ஊர்களில் பதற்றம் நிலவுகிறது.
எப்போதும், எதுவும் நடந்துவிடலாம் என்ற சூழல். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்குச் சட்டம் போட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டிய சூழலில் நாடு இருக்கிறது.
தென்மாவட்டங்களில் நடைபெறும் ஜாதி, இன மோதல்களைத் தடுப்பது தொடர்பாக காவல் துறையினரின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
ஆலோசனைக் குழு, சுவரில் எழுதியுள்ள ஜாதி விளம்பரங்களை தார் பூசி அழிப்பது, குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகளை அப்பகுதியில் நியமிக்காமல் இருப்பது போன்ற ஆலோசனைகளை அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளன.
ஆனால் இவையெல்லாம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகாது. இத்தகைய விஷ விருட்சங்களை வேருடன் களைய வேண்டுமே தவிர, கிளைகளை முறிப்பதால் மட்டும் பயன் கிடைத்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தோரும் நன்கு படித்து, மிக உயர்ந்த பதவிகளிலும், நல்ல பொருளாதார நிலையிலும் உள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் ஜாதியின் தேவை என்ன  என்பதைச் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.
இத்தகைய ஜாதிய பிரச்னைகளுக்கான தீர்வு நம் கைகளில்தான் உள்ளது. திறமையின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு கல்வி ஒதுக்கீடு, பணி நியமனம் வழங்க வகை செய்யவேண்டும்.
   நன்கு படித்து, மதிப்பெண்கள் பெற்று மருத்துவர் ஆனவர்தான் மக்களுக்குச் சிறப்பான மருத்துவச் சேவை அளிக்க முடியும். நன்கு படித்து, பொறியாளர் ஆனவர் கட்டும் பாலம்தான் சிறப்பான முறையில் மக்களுக்கு பயனளிக்கும்.
திறமைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் கல்வி, வேலைவாய்ப்பு முறை அமலுக்கு வரவேண்டும்.
 காதல் திருமணங்கள் பெருகி, ஜாதி வேறுபாடற்ற சமுதாயம் மலரவேண்டும். அப்படியொரு சமத்துவம் கண்டால்தான் நாடு முன்னேறும்.

Tuesday, 18 November 2014

தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டுமா?


  1. உங்களுக்கு நன்றாக தெரிந்த விடைகளை முதலில் எழுதுங்கள்

  2. முதல் பக்கத்தில் ஒரு விடையை எழுதிவிட்டு அடிக்காதிர்கள். அது உங்களை பற்றி ஒரு தாழ்ந்த எண்ணத்தை ஏற்படுத்தும்

  3. சரியான வினா எண்ணை எழுதுங்கள். வெறும் c என்று எழுதினால் போதாது. அது எந்தக் கேள்வியில் உள்ள c என்பதைத் தெளிவாக எழுத வேண்டும்.

  4. மிகச்சிறிய எழுத்துகளாக எழுதாதீர்கள். அது விடைத்தாள் திருத்துபவர்க்கு எரிச்சலைத் தரும்.

  5. வரிக்கு வரி இடம் விட்டு எழுதுங்கள்.

  6. ஒவ்வொரு விடை எழுதி முடித்தவுடன் ஒரு கோடு போடுங்கள்.

  7. ஒவ்வொரு பக்கத்திலும் மேலே ஓர் அங்குலம், கீழே ஓர் அங்குலம் இடம் விடுங்கள்.

  8. பெரிய விடைகளுக்கு ஒரு தலைப்புக் கொடுங்கள். அல்லது வினாவை எழுதி அடிக்கோடு இட்டுவிட்டு, விடை எழுதத் தொடங்குங்கள். இதனால் திருத்துபவரின் வேலை எளிதாகும். ஆனால் சிறு விடைகளுக்கு இது தேவையில்லை.

  9. தெளிவான கையெழுத்து உங்கள் மதிப்பெண்களை உயர்த்தும்.

  10. எழுதிய விடையை அடிக்க வேண்டுமென்றால், ஒரே ஒரு குறுக்குக் கோடு அழுத்தமாகப் போடுங்கள். மர்ஜினில் உள்ள வினா எண்ணையும் நன்றாக அடித்து விடுங்கள்.

  11. மார்ஜினுக்கு உட்புறம் கேள்விa எண்ணைத் தவிர வேறு எந்த எண்ணையும் எழுதக் கூடாது. உங்கள் விடையில் உள்ள பாய்ன்ட் எண்களை மார்ஜினுக்குள் எழுதக்கூடாது.

  12. தமிழ் மனப்பாடப் பகுதிகளை எழுதும்போது பா, சீர், அடி ஆகியவை கெட்டுவிடாமல் எழுதுங்கள்.

  13. தமிழ்த் தேர்வில் ஆங்கிலச் சொற்களை பயன்படுத்தாதீர்கள். ஆங்கிலத் தேர்வில் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தக்கூடாது.

  14. எழுத்துப்பிழை வருவதைத் தவிர்க்க, கடினமான சொற்கள் ஒவ்வொன்றையும் பத்துமுறை வீட்டில் எழுதிப் பாருங்கள்.

  15. கணக்கில் ROUGH  WORK தெளிவாகவும், அந்தந்த இடங்களிலேயே செய்ய வேண்டும்.

  16. அறிவியல் வரைபடங்கள் அழகாக வரைய முடியவில்லையே என்று கவலைப்பட வேண்டாம். அவை தெளிவாக இருப்பதுதான் முக்கியம்.

  17. எந்த எண்ணையும் தெளிவாக, புரியும்படி கவனமாக எழுதுங்கள்.

  18. தாள்களில் பக்க எண்களை அவ்வப்பொழுதே எழுதிவிட்டால், கடைசியில் குழப்பம் இல்லாமல் அடுக்க முடியும்.

  19. தேர்வு எழுத பால்பாய்ன்ட் பேனாவை விட மைப்பேனாவே சிறந்தது. விலை குறைந்த பால்பாய்ன்ட் பேனா உங்கள் மதிப்பெண்களையும் குறைத்து விடும்.

  20. எத்தனை விடைகள் எழுத வேண்டுமோ, அவற்றை மட்டும் எழுதுங்கள். கூடுதலாக எழுதி, திருத்துபவரை ஏமாற்ற முயல வேண்டாம். எழுத வேண்டிய அனைத்துக் கேள்விகளுக்கும் விடை எழுதவும்.

  21. ஒரே விடையை இரண்டு இடங்களில் எழுதாதிர்கள்.

  22. கேள்வித் தாளில் தவறுகள் இருக்க வாய்ப்பு உண்டு. அதற்காக விடை எழுதாமல் வந்து விடாதிர்கள். தவறுள்ள கேள்விக்கு நீங்கள் என்ன விடை எழுதினாலும், முழு மதிப்பெண் கிடைக்கும். ஒரே கேள்விக்கு பதில் எழுத அதிக நேரம் செலவிடவும் வேண்டாம்.

  23. தேர்வு எழுதுவதற்குத் தரப்பட்டுள்ள முழு நேரத்தையும் பயன்படுத்துங்கள். ஒரு மணி நேரத்தில் எழுதி விட்டு வீட்டுக்குப் போவதால் நீங்கள் அடையும் இலாபம்தான் என்ன?

  24. உங்கள் விடைத்தாளைத் திருத்தப்போவது ஒரு மனிதர், கம்ப்யூட்டர் அல்ல. அவருக்கு கோபமூட்டும்படி எதுவும் செய்யாதீர்கள்.

  25. கொடுக்கப்பட்ட நேரத்தில் 10 நிமிடங்களாவது எழுதியதைப் படிக்கவும். தவறுகளை திருத்தவும், பக்கங்களை ஒழுங்குப்படுத்தவும் செலவிடவும்.

  26. ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை, நாளைக்குப் படிப்போம் என்றில்லாமல் அன்றைய தினமே படிக்க வேண்டும்.

  27. தெளிவான உச்சரிப்புடன் வாய்விட்டு அதிக சப்தமின்றிப்  படிக்க வேண்டும்.

  28. தேர்வுக்காலங்களில் இரவு முழுவதும் கண்விழித்துப் படிப்பது தவறு. குறைந்தது  ஆறு மணி நேரம் தூங்க வேண்டும்.

  29. படிப்பதை ஒப்புவிப்பத்தோடு இல்லாமல் எழுதிப்பார்ப்பது மிகவும் அவசியம்.

  30. ஒரு பாடத்தை எழுதிப் பார்க்காமல் அடுத்தப் பாடத்தைத் தொடங்கக் கூடாது.

  31. எழுதியதைப் புத்தகத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து, தவறுகளைத் திருத்திக் கொள்ள வேண்டும்.

  32. மாணவர்கள் சேர்ந்து படிப்பதால் [GROUP STUDY] சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

  33. தினமும் விடியற்காலை எழுந்து படிக்க வேண்டும்.

  34. ஆங்கிலப் பாடத்தைக் காலையில் எழுந்து படிக்க வேண்டும்.

  35. ஆங்கிலம் போன்ற பிற மொழிகளைப் படிக்கும்போது தெரியாதவற்றிற்கு அகராதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

  36. ஒவ்வொரு வார இறுதியிலும் அந்த வாரப் பாடங்களை ஒருமுறை திருப்புதல் வேண்டும்.

  37. தன்னம்பிக்கையோடு எழுதுங்கள்........... வெற்றி உறுதி.