Blogger news

Sunday 8 February 2015

சாதிகளற்ற சமத்துவம் தேவை - இராம. பரணீதரன்

இந்தியா போன்ற பல்வேறு மொழி, கலாசாரம், பண்பாடு உடைய மதச்சார்பற்ற நாட்டில் அவ்வப்போது சிறுசிறு பிரச்னைகளும், கலவரங்களும் ஏற்படுவது வழக்கம்தான்.
இதுபோன்ற பிரச்னைகள் நம்நாடு சுதந்திரமடைவதற்கு முன்பே தொடங்கிவிட்டன. இவற்றிற்கு முக்கியக் காரணம் ஒற்றுமையின்மையே.
காலங்கள் மாறினாலும், நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்றாலும், இந்த ஒற்றுமையின்மை மட்டும் இன்றுவரை அப்படியே தொடர்கிறது. மாநிலங்கள், மாவட்டங்கள், கிராமங்கள் என்று எங்கும் ஒற்றுமை இருப்பதில்லை.
குறிப்பாக, மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு மிகவும் குறைவு. அதனால்தான் சாதிக் கலவரங்களும், மதக் கலவரங்களும், பழிக்குப்பழியாகக் கொலைகளும் நடைபெற்று தமிழகத்தில் அவ்வப்போது ரத்த ஆறு ஓடுகிறது.
ஜாதி, மத மோதல்களைத் தடுக்க அரசு எவ்வளவோ முயற்சிகள் எடுத்தாலும், அரசால் முழுமையாகத் தடுக்க இயலவில்லை.
ஏனெனில், இங்குள்ள மக்களின் மனதில் சாதியக் கோட்பாடுகள்  ஆழமாக வேரூன்றிவிட்டன. அவற்றை அகற்றுவது எளிதானதல்ல.
10 வருடங்களுக்கு முன்பு எனது மாணவன் ஒருவன், தேர்வுத் தாளில் தன் பெயரோடு தன் ஜாதியின் பெயரையும் இணைத்து எழுதியிருந்தான்.
இதுகுறித்து, நான் அவனை அழைத்துக் கேட்டபோது, தன் பெயரே அதுதான் என வாதிட்டான். நான் "வருகைப் பதிவேட்டில் பெயர் எவ்வாறு உள்ளதோ அப்படித்தான் பெயரை எழுதவேண்டும்' என அறிவுறுத்தினேன்.
அதற்கு அந்த மாணவன் கூறிய பதில் என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. "சார், எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே எங்க ஊர் திருவிழா, திருமண விழா என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் போஸ்டர், பேனரில் என் பெயரை இப்படித்தான் போடுவோம்' என்றான்.
குழந்தைகளின் பிஞ்சு நெஞ்சிலேயே ஜாதி எனும் விஷ விதை தூவப்படுகிறது. இது, குழந்தையோடு சேர்ந்து வளர்ந்து, வாலிப பருவத்தில் தன் வீரியத்தை ஜாதி மோதலாகவோ, கலவரமாகவோ காட்டிவிடுகிறது. இது இன்று நேற்றல்ல, காலங்காலமாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் ஒரு காதல் விவகாரம் இரு கிராமத்தைச் சேர்ந்த இரண்டு சமூகத்தினரிடையே மிகப் பெரிய பிரச்னையாக மாறி பல உயிர்களைப் பலி வாங்கியதோடு, பெரும் பொருள் சேதத்தையும் ஏற்படுத்தியதை யாரும் மறந்திருக்க முடியாது.
பிரச்னையின் இத்தகைய தீவிரப் போக்குக்கு ஒரு சில தலைவர்களும் காரணம் என்பதை யாரும் மறுக்க இயலாது.
மக்களிடையே ஜாதித் தீயை மூட்டிவிட்டு, அதில் குளிர் காய்பவர்களே இன்று அதிகமாக உள்ளனர். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களை, தங்கள் ஜாதிக்காரர், தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் என முத்திரை குத்தி, அந்தத் தலைவர்களின் தியாகத்தையும் கொச்சைப்படுத்துவதன் மூலம், தேசியத் தலைவர்களை ஜாதியத் தலைவர்களாக மாற்றிவிடுகின்றனர்.
இதேபோல், ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட தேசியத் தலைவர்களின் பிறந்த நாள், நினைவு நாள் வரும்போது, சில ஊர்களில் பதற்றம் நிலவுகிறது.
எப்போதும், எதுவும் நடந்துவிடலாம் என்ற சூழல். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்குச் சட்டம் போட்டு அந்த நிகழ்ச்சியை நடத்தவேண்டிய சூழலில் நாடு இருக்கிறது.
தென்மாவட்டங்களில் நடைபெறும் ஜாதி, இன மோதல்களைத் தடுப்பது தொடர்பாக காவல் துறையினரின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
ஆலோசனைக் குழு, சுவரில் எழுதியுள்ள ஜாதி விளம்பரங்களை தார் பூசி அழிப்பது, குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த காவல் துறை உயர் அதிகாரிகளை அப்பகுதியில் நியமிக்காமல் இருப்பது போன்ற ஆலோசனைகளை அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளன.
ஆனால் இவையெல்லாம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாகாது. இத்தகைய விஷ விருட்சங்களை வேருடன் களைய வேண்டுமே தவிர, கிளைகளை முறிப்பதால் மட்டும் பயன் கிடைத்துவிடாது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்று அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தோரும் நன்கு படித்து, மிக உயர்ந்த பதவிகளிலும், நல்ல பொருளாதார நிலையிலும் உள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் ஜாதியின் தேவை என்ன  என்பதைச் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது.
இத்தகைய ஜாதிய பிரச்னைகளுக்கான தீர்வு நம் கைகளில்தான் உள்ளது. திறமையின் அடிப்படையிலேயே மாணவர்களுக்கு கல்வி ஒதுக்கீடு, பணி நியமனம் வழங்க வகை செய்யவேண்டும்.
   நன்கு படித்து, மதிப்பெண்கள் பெற்று மருத்துவர் ஆனவர்தான் மக்களுக்குச் சிறப்பான மருத்துவச் சேவை அளிக்க முடியும். நன்கு படித்து, பொறியாளர் ஆனவர் கட்டும் பாலம்தான் சிறப்பான முறையில் மக்களுக்கு பயனளிக்கும்.
திறமைக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கும் கல்வி, வேலைவாய்ப்பு முறை அமலுக்கு வரவேண்டும்.
 காதல் திருமணங்கள் பெருகி, ஜாதி வேறுபாடற்ற சமுதாயம் மலரவேண்டும். அப்படியொரு சமத்துவம் கண்டால்தான் நாடு முன்னேறும்.

No comments:

Post a Comment