Blogger news

Showing posts with label ஆங்கிலம். Show all posts
Showing posts with label ஆங்கிலம். Show all posts

Saturday, 27 December 2014

ஐ லவ் யூவா, ஐ எம் லவ்விங் யூவா? - ஜி.எஸ்.சுப்ரமணியன் - தி இந்து

ஒரு வாசகர் “I play cricket” என்பதற்கும் “I am playing cricket” என்பதற்கும் அர்த்தத்தில் என்ன வித்தியாசம் என்று கேட்டிருக்கிறார். இதற்கான விளக்கம் வேறு பல தவறுகளைக்கூடச் சரி செய்யும் வாய்ப்பை அளிக்கக் கூடும். 

“I play cricket” என்பது present tense. (சிலர் இதை simple present tense என்றும் கூறுவார்கள்). 

“I am playing cricket” என்பது present continuous tense. 

இரண்டு வாக்கியங்களும் வெவ்வேறு அர்த்தம் கொண்டவை. “I am playing cricket” என்று நீங்கள் சொன்னால் கிரிக்கெட் மட்டையும் கையுமாக (அல்லது கிரிக்கெட் பந்தும் கையுமாக) அதைச் சொல்கிறீர்கள் என்று அர்த்தம். அதாவது இதைச் சொல்லும் நொடியில் நீங்கள் அந்தச் செயலைச் செய்து கொண்டிருக்கிறீர்கள். 

“I play cricket” என்றால் நீங்கள் கிரிக்கெட் ஆடும் பழக்கம் கொண்டவர் என்று அர்த்தம், அவ்வளவுதான். 

இதையே வேறு மாதிரிச் சொல்லலாம். “I am living in London” என்றால் நீங்கள் இப்போதும் அங்கு வசிக்கிறீர்கள், அங்கிருந்தபடி இதைச் சொல்கிறீர்கள். 

“I live in London” என்று நீங்கள் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்கு வரும்போதுகூடக் கூறலாம். 

பொதுவாக (மேற்படி குழப்பம் வேண்டாமே என்பதற்காகவோ என்னவோ) present tense verbக்கு முன்பாக always, often போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். கீழே உள்ள வாக்கியங்களை நன்கு கவனியுங்கள். 

He always likes her presence. 

Malathi frequently visits her home town. 

He often comes with us here. 

It occasionally rains in summer. 

I rarely ask for help. 

We never visit this hospital. 

Present continuous tense என்பதை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பதற்கும் நாம் சில கூடுதல் வார்த்தைகளைப் பயன்படுத்துவ துண்டு. இதோ சில உதாரணங்கள். 

What are you doing now? 

I think you are eating a lot nowadays. 

I am speaking to you, at the moment. 

வருங்காலத்தில் விரைவிலேயே நடக்கவிருப்பதைக் குறிக்கும்போதும் Present continuous tense ஐப் பயன் படுத்தலாம்.

இரண்டு உதாரணங்கள் இதோ.

I am going to a movie tonight. My uncle is arriving tomorrow. 

Amoral – Immoral – Immortal 

Moral என்பது ஒழுக்கநெறி தொடர்பான ஒரு வார்த்தை. Moral story என்றால் அந்தக் கதையில் ஒழுக்கம் போதிக்கப்படுகிறது என்று அர்த்தம். 

அதற்காக amoral என்றால் அதற்கு எதிர்ச்சொல் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. ஒழுக்கநெறிக்குத் தொடர்பில்லாதது (எதிரானது அல்ல) என்று கூறலாம். 

Mathematics is an amoral subject. 

ஆனால், immoral என்பது, moral என்பதன் எதிர்ச்சொல். Cheating, stealing, lying are immoral acts. 

Moral என்பது வேறு. Mortal என்பது வேறு. Mortal என்றால் இறப்பு நேரக்கூடிய என்று அர்த்தம். Immortal என்றால் இறப்பில்லாதது என்று அர்த்தம். All human beings are mortal. No one is immortal. 

இரு ஆங்கில இதழ்களின் பெயர்கள் குறித்து ஒரு சந்தேகம் வந்திருக்கிறது ஒரு வாசகருக்கு. 

“அது ஏன் Readers’ Digest? அப்படியானால் எதற்கு Women’s Era?’’ என்று ரத்னச் சுருக்கமாகக் கேட்டிருக்கிறார். 

Readers என்பது பன்மை. அதனால் அதற்குப் பிறகு apostrophe வந்திருக்கிறது. (Reader என்பதற்குப் பிறகு அந்த நிறுத்தக் குறி வந்திருந்தால், அது ஏதோ ஒரு வாசகருக்கானது என்றாகிவிடும்). Women என்பதே பன்மை என்பதனால், அதைத் தொடர்ந்து அந்த நிறுத்தக் குறி இடம்பெற்றிருக்கிறது. 

Parents’ Day. Valentine’s Day. இந்த இரண்டையும் கவனித்துப் பார்த்தால் நான் சொல்ல வந்தது மேலும் தெளிவாகவே விளங்கும்.

Monday, 3 November 2014

அர்த்தமும் அனர்த்தமும் - ஜி.எஸ்.சுப்ரமணியன்

சமீபத்தில் சேலத்தில் உள்ள கல்லூரி ஒன்றுக்கு ஆங்கிலப் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது அதன் தாளாளர் நகைச்சுவையாக ஒரு சம்பவத்தை (கதையை) மாணவர்களிடம் விவரித்தார். “I will give you a ring tomorrow’’ என்று ஓர் ஆசிரியரிடம் அவர் கூற, அந்த ஆசிரியர் ஆர்வத்துடன் விரலைத் தடவியபடி தங்க மோதிரத்துக்காகக் காத்திருந்து, தொலைபேசி அழைப்பை மட்டும் பெற்று ஏமாந்தாராம். (தினசரிப் பேச்சுவார்த்தையில் give a ring என்பது தொலைபேசியில் அழைப்பது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்).


அர்த்தமும் அனர்த்தமும்


சில ஆங்கில வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொண்டால் கோபமோ, வருத்தமோ உண்டாவது சகஜம்தான்.
உறவினர் வீட்டுக்கு நண்பரோடு சென்றிருந்தேன். ஏற்கெனவே நண்பரை அறிந்திருந்த உறவினர் “He is a man of his words’’ என்று புகழ்ந்து பேசினார். வீடு திரும்பும்போது நண்பரின் முகம் சிறுத்துக் காணப்பட்டது.
“நான் என்ன பேச்சோடு சரியா? காரியத்திலே சைபரா?’’ என்றார். பிறகு அவருக்கு விளக்கினேன். Man of his words என்றால் நம்பகத் தன்மையோடு பேசுபவர் என்ற அர்த்தம் என்று விளக்கினேன். இயல்பானார்.
ஒருவரின் செல்போன் தொலைந்து விட்டது. அவருடைய நண்பர் அதைப் பல இடங்களிலும் தேடிப் பார்த்தார். தொலைத்தவர் நண்பரைப் பற்றி “He spared no efforts’’ என்று கூற, மனம் வெறுத்துப் போனார் நண்பர். அதற்கு அவசியமில்லை. அந்த வாக்கியத்துக்கு “எந்த முயற்சியும் எடுக்கவில்லை’’ என்ற அர்த்தமில்லை. “எந்த முயற்சியையும் விட்டு வைக்கவில்லை’’ என்ற பாசிட்டிவான பொருள்தான்.


விஷமமும் விபரீதமும்


இதோ ஒரு கற்பனைச் சம்பவம். வெளியில் சென்று விட்டு வீடு திரும்பினர் மெத்தப் படித்த மகனும், மருமகளும். “என்னம்மா கோகுல் ரொம்ப விஷமம் பண்ணாமல் இருந்தானா?’’ என்று அவர்கள் கேட்க, பேரனைப் பாதுகாத்துக் கொண்டிருந்த பாட்டிக்கு ஏனோ தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வெளிக்காட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அவன் செய்த விஷமங்களைப் பட்டியல் இடத் தொடங்கினார். “Gokul kicked the bucket’’ என்று கூற, மருமகள் வீலென்று அலற, பிறகுதான் விவரத்தைப் புரிந்து கொண்டனர். ஆங்கிலத்தில் ‘Kicked the bucket’ என்றால் இறந்துவிட்டார் என்று பொருள். (ஒருவேளை முன்னொரு காலத்தில் தூக்கிலிடும்போது மரண தண்டனைக் கைதியின் காலுக்குக் கீழே உள்ள பக்கெட்டை எட்டி உதைத்து விடுவார்களோ?)
உங்கள் வீட்டில் தங்கியவர் வேறிடத்துக்குச் சென்றுவிட்டார் என்றால் “He is no more here’’ என்று சொல்லுங்கள் தப்பில்லை. ஆனால் மறந்து போய் more என்பதற்கும் here என்பதற்கும் நடுவே பெருத்த இடைவெளியை விட்டுத் தொலைக்காதீர்கள். ‘இங்கு இல்லை’ என்பதற்குப் பதிலாக ‘உலகத்திலேயே இல்லை’ என்கிற அர்த்தம் தோன்றிவிடும்.
“Break a leg” என்றால் காலை உடைத்துக் கொள் என்று அர்த்தமில்லை. “All the best”, “நல்லாப் பண்ணு” என்பது போன்ற அர்த்தம்தான் அதற்கு. நாடகத்தில் நடிப்பவர் களுக்குதான் இந்த வகை வாழ்த்து (?) தொடக்கத்தில் கூறப்பட்டு வந்தது.
பதவியையும் செல்வாக்கையும் பயன்படுத்தி குறுக்குவழியில் காரியத்தைச் சாதித்துக் கொள்பவர்கள் உண்டு. They throw their weight around. (அதாவது அதிக எடை கொண்டவர்கள் என்பதில்லை. ‘அவர் வெயிட்டான பார்ட்டி’ என்று சொல்கிறோமே அந்த அர்த்தம்).


எடுத்துக்காட்டும் சுருக்கமும்


e.g. மற்றும் i.e. ஆகிய இரண்டு பயன்பாடுகளுக்கும் முக்கிய வித்தியாசம் உண்டு.
லத்தீன் மொழியிலுள்ள ‘Exemply–gratia’ என்பதன் சுருக்கம்தான் e.g. இதற்குப் பொருள் ‘எடுத்துக்காட்டாக’ என்பதாகும். அதாவது பல உதாரணங்களைக் கூற முடியும்போது அவற்றில் ஒன்றைக் கூறுவது.
History has seen great orators. e.g. Vivekananda.
Many diseases are spread by mosquitoes. e.g. Malaria
லத்தீன் மொழியிலுள்ள idest (சுருக்கமாக i.e.) என்பதன் அர்த்தம் that is. அதாவது கொடுக்கப்பட்டுள்ள உதாரணம் மட்டுமே அந்த விளக்கத்துக்கு இருக்க முடியும். America was named after the person who discovered it, i.e. Amerigo Vespucci.
Lethal – Fatal
Fatal accident என்று அடிக்கடி நாளிதழில் பார்க்கிறோம். Fatal என்றால் – இறப்பில் முடிந்த என்ற அர்த்தம். அதாவது அந்த விபத்தில் யாரோ இறந்திருக்கிறார்.
Lethal என்பதும் கிட்டத்தட்ட இதே அர்த்தம் கொண்டதுதான். என்றாலும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. Lethal என்றால் இறப்பு நேர்ந்து விட்டது என்று அர்த்தம் அல்ல. இறப்பு உண்டாக வாய்ப்பு உண்டு என்பதைக் குறிக்கிறது அது. Lethal dose of a medicine என்றால் அந்த மருந்தை உட்கொண்டால் இறப்பு உண்டாக வாய்ப்பு உண்டு. அதாவது இறப்பு நேர்ந்து விடவில்லை. நேரிடலாம். ஆனால் fatal என்றால் இறப்பு நேர்ந்துவிட்டது.
ஆங்கிலத்தின் சரியான அர்த்தத்தை உணராமல், அனர்த்தமாகப் புரிந்துகொண்டு விடக் கூடாது.

Wednesday, 22 October 2014

ஆங்கிலத்தில் கடிதம் எழுத....



என்னதான் ஆங்கிலம் படித்திருந்தாலும் தாய்மொழியில் கடிதம் எழுதுவதைப் போல் ஆங்கிலத்தில் சரியான கடிதத்தை எழுத முடியவில்லை என்று பலரும் புலம்பிக்கொண்டிருக் கின்றனர்.
தாங்கள் எழுதும் ஆங்கிலக் கடிதங்களில் எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை என்று ஏதாவது தவறு வந்து விடுமோ? இதன் மூலம் நம்முடைய கருத்தில் பெரும் தவறு நேர்ந்துவிடுமோ? என்னும் அச்சம் எல்லோரிடமும் இருக்கத்தான் செய்கிறது. இந்த அச்சத்தைப் போக்கிட, ஆங்கிலத்தில் பல்வேறு வகையான கடிதங்களைக் கொண்டு ஒரு இணையதளம் செயல்பட்டுவருகிறது.
கடித தளம்
இந்த இணையதளத்தில் ஒப்புதல் (Acceptance), ஒப்புகை (Acknowledgement), உடன்படிக்கை (Agreement), அறிவிப்பு (Announcement), மன்னிப்பு (Apology), மேல் முறையீடு (Appeal), விண்ணப்பம் (Application), நியமனம் (Appointment), மதிப்புயர்வு (Appreciation), அதிகாரமளிப்பு (Authorization), பிறந்தநாள் (Birthday), வணிகம் (Business), நீக்கம் (Cancellation), சான்றளித்தல் (Certification), முறையீடு (Complaint), இரங்கல் (Condolence), உறுதி செய்தல் (Confirmation), வாழ்த்துகள் Congratulations), திறனாய்வு (Criticism), பணி நீக்கம் (Dismissal), நன்கொடை (Donation), ஏற்பிசைவு (Endorsement), வழியனுப்புரை (Farewell), பின் தொடர் (Follow Up), முறைப்படியான (Formal), நட்பு (Friendship), நிதி திரட்டுதல் (Fundraising), பிரியாவிடை (Goodbye), புகார் (Grievance), விசாரணை (Inquiry), நேர்காணல் (Interview), அறிமுகம் (Introduction), அழைப்பிதழ் (Invitation), விடுப்பு (Leave), காதல் (Love), சந்தைப்படுத்தல் (Marketing), ஒழுங்கு (Order), அனுமதி (Permission), வசமாக்குதல் (Persuasive), பணி உயர்வு (Promotion), பரிந்துரை (Recommendation), மேற்கோள் (Reference), வேண்டுகோள் (Request), பணித் துறப்பு (Resignation), பணி ஓய்வு (Retirement), காதல் நயம் (Romantic), நன்றி (Thank You), இடமாற்றம் (Transfer), எச்சரிக்கை (Warning), வரவேற்பு (Welcome) என்பன உள்ளிட்ட 69 வகையான மாதிரி கடிதங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
மாற்றி யோசி!
ஒவ்வொரு தலைப்பையும் சொடுக்கினால், அத்தலைப்புடன் தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்ட கடித மாதிரிகள் தரப்பட்டிருக் கின்றன. இத்தளத்தில் இடம்பெற்றிருக்கும் 1350க்கும் அதிகமான மாதிரிக் கடிதங்களிலிருந்து நமக்குத் தேவையான மாதிரிக் கடிதத்தை எடுத்து, நமக்கேற்றவாறு சிறு சிறு மாற்றங்களை மட்டும் செய்து புதிய கடிதங்களை உருவாக்கிக்கொள்ளலாம்.
அப்புறமென்ன, ஆங்கிலக் கடிதம் எழுத இனிச் சிறிதும் அச்சப்பட வேண்டாம். http://www.letters.org எனும் இணைய முகவரிக்குச் சென்று நாமும் ஆங்கிலக் கடிதங்களை எழுதி அசத்தலாம்.

Wednesday, 8 October 2014

கோ ஹோம், கோ டூ ஹோம் எது சரி ? - ஜி.எஸ்.சுப்ரமணியன் (தி இந்து)



OMNI ஆம்னி என்றால் எல்லாம் என்று அர்த்தம். இறைவனை OMNIPRESENT என்பதுண்டு. அதாவது எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவன். OMNIPOTENT என்றும் சொல்வதுண்டு. சர்வசக்திகளும் படைத்தவன் என்ற அர்த்தத்தில். OMNIVORE என்றால் எல்லாவற்றையும் சாப்பிடக்கூடிய மிருகம் என்று பொருள். அதாவது பிற விலங்குகள், தாவரங்கள் என்று எதையும் சாப்பிடக் கூடியது.
அதெல்லாம் இருக்கட்டும் OMNI BUS என்கிறோமே அதற்கு என்ன அர்த்தம்? அந்தக் காலத்தில் குதிரைகளால் இழுக்கப்பட்ட, மூடப்பட்ட வண்டியைத்தான் OMNIBUS என்பார்கள். லத்தீன் மொழியில் OMNIBUS என்றால் அனைவருக்குமானது என்று பொருள். OMNIBUS எந்த இடத்திற்கும் செல்லும் (அதாவது இந்த தடத்தில் மட்டுமே இது செல்லும் என்பது கிடையாது).
Potable water
ஓர் அடுக்கக விற்பனை விளம்பரத்தில் வசதிகள் என்ற பட்டியலின் கீழ் Potable water என்று குறிப்பிட்டதைச் சுட்டிக் காட்டும் ஒரு வாசகர் இப்படியொரு கேள்வியை எழுப்பியிருக்கிறார். ‘’வெளியிடத்திலிருந்து இங்கே தண்ணீர் கொண்டு வருகிறார்கள் என்றால் அது எப்படி ஒரு சாதகமான விஷயம்?’’.
Potable என்ற வார்த்தையோடு portable என்ற வார்த்தையை இவர் குழப்பிக் கொண்டிருக்கிறார் என்று படுகிறது. Portable என்றால் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்லக்கூடிய என்று பொருள். Potable என்றால் குடிக்கத்தக்க என்று அர்த்தம்.
Potable water என்றால் அந்த நிலத்தில் கிடைக்கும் தண்ணீர் குடிக்கத்தக்கது - அதாவது உப்பாக இருக்காது என்று பொருள். இது சாதக மானதுதானே?
டெலிவரி
‘’My wife delivered a baby yesterday’’ என்று ஒருவர் சொன்னால் என்ன செய்வீர்கள்? ‘’இதென்ன கேள்வி? கை கொடுப்பேன். வாழ்த்து சொல்வேன்.. மறக்காமல் “எப்ப ட்ரீட் என்பேன்’’ என்கிறீர்களா? இதையெல்லாம் செய்யுங்கள். ஆனால் பிறகு நேரம் கிடைக்கும்போது அவர் கூறிய வாக்கியத்திலுள்ள தவறையும் எடுத்துக் காட்டுங்கள்.
‘’My wife delivered a baby yesterday’’ என்ற வாக்கியத்தில் என்ன தவறு என்கிறீர்களா? இப்படி யோசியுங்கள். உங்களுக்கு ஒரு தபாலில் ஒரு பார்சல் வந்தால் அதை ‘’The postman delivered a parcel’’ என்பீர்கள் இல்லையா? அதாவது தபால்காரரின் வேலை யாரோ அனுப்பிய பார்சலை உங்களிடம் சேர்ப்பிப்பது மட்டும்தான். ஆனால் உங்கள் நண்பரின் மனைவி கஷ்டப்பட்டுத் தானாகவே ஒரு குழந்தையைப் பெற்றிருக்கிறாள். அவருக்குப் பிரசவம் பார்த்த டாக்டரைப் பற்றி வேண்டுமானால் ‘’The doctor delivered the baby to me’’ எனலாம். எனவே ‘’My wife gave birth to a child yesterday’’ என்று உங்கள் நண்பர் கூறுவதுதான் சரியானது.
புயலென…
Stormed என்பதன் அர்த்தத்தைக் கேட்டிருக்கிறார் ஒரு வாசகர். Storm என்பது புயல். இது பெயர் சொல். ஆனால் Stormed என்பது கடந்த கால வினைச்சொல் - Verb in past tense.
Stormed என்றால் கோபத்துடனும், வேகமாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்வது என்று பொருள். எடுத்துக் காட்டு - He burst into tears and stormed off. புயலெனக் கிளம்பினான், வில்லினின்று விடுபட்ட அம்பு
போலக் கிளம்பினான் என்றெல்லாம் இதற்குப் பொருள் கொள்ளலாமா என்று கேட்கும் அனைத்து ராசி நண்பர்களே, கொள்ளலாம். கொள்ளலாம் என நான் கூறுகிறேன்.
பொங்கி எழும் வாசகர்கள்
நம் வாசக நண்பர்கள் “பொறுப்பதே வேண்டாம். பொங்கி எழு” பிரிவினர்.
“பாரம்பரியம் மிக்க இந்து இதழில் நீங்கள் இப்படி ஒரு தவறு செய்யலாமா?” என்று ஒருவர் கடிதம் போட்டுள்ளார்.
இருவாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருந்த கார்ட்டூனில் “Go to home” என்ற வாக்கியம் இடம் பெற்றிருந்தது. “Go home” என்பதுதான் சரி என்று சுட்டியும், குட்டியும் வந்தன கடிதங்கள்.
“Go to home” என்று நான் எழுதுவதற்கு முன்பாக எனக்குள் நானே இரண்டு பகுதிகளாகப் பிரிந்து (அந்தக் காலத் திரைப்படக் காட்சிகளில் காணப்படுவது போல) விவாதித்தேன். அந்த விவாதம் இப்படி இருந்தது.
பகுதி 1 – Go abroad என்றுதானே எழுதுகிறோம்? அப்படியானால் Go home என்றுதான் எழுத வேண்டும்.
பகுதி 2 – Go to hospital என்று எழுதுவாயா? இல்லை Go hospital என்று எழுதுவாயா? (இந்த இடத்தில் பகுதி-2 விடமிருந்து ஏளனச் சிரிப்பு. காரணம் Go hospital என்றதும் மருத்துவமனையே நகர்ந்து செல்வது போன்ற காட்சி அதற்குள் விரிகிறது).
பகுதி 1 – இதென்ன உளறல்? Go to downstairs என்பாயா? Go downstairs தானே? எனவே Go home தான்.
பகுதி 2 – அதெல்லாம் இருக்கட்டும். Go to house என்று எழுதும்போது Go home என்று ஏன் எழுத வேண்டும்?
பகுதி 1 – பிரபல இலக்கண நூல்களை ரெஃபர் செய்தும் புரிய வில்லையா? Go home என்பதில் home என்பது adverb ஆகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
(இதைத் தொடர்ந்து ‘’Home என்பது இந்த இடத்தில் adverb என்றால் house என்பது ஏன் adverb இல்லை? தவிர இந்த விளக்கம் தெளிவைத் தரவில்லை’’ என்றெல்லாம் விவாதித்த பகுதி – 2, ‘’Go to Home’’ என்றே எழுத வைத்து விட்டது.)
வாசகர்களின் கடிதங்களுக்குப் பின் -
பகுதிகள் 1 & 2 இரண்டும் சேர்ந்து சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது இதுதான். லாஜிக் எப்படி இருந்தாலும், சமீபத்தில் சில ஆங்கில எழுத்தாளர்கள் வேறுமாதிரி எழுதினாலும், தொன்று தொட்டுப் பயன்பாட்டில் இருப்பது Go Home தான். Go Home தான்.
என்ன … திருப்தி தானே- ?