Blogger news

Saturday, 4 October 2014

ஆசிரியர் பணி பற்றிய திரு.வெ.இறையன்பு அவர்களின் அழகான உரை.




  பள்ளிக் கல்வித்துறையின்  சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சியை தந்த பள்ளிகள் மற்றும் பாட ஆசிரியர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் திரு.வெ.இறையன்பு IAS அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது :

  ஆசிரியர் என்பவரை சிலர் ஏணி என்பார்கள், சிலர் தோணி என்பார்கள் நான் அவ்வாறு அழைக்கமாட்டேன் காரணம் ஏணி ஒருவர் ஏறுவதற்கும் பயன்படுகிறது இறங்குவதற்கும் பயன்படுகிறது, தோணி கடப்பதற்கும் பயன்படுகிறது, திரும்புவதற்கும் பயன்படுகிறது.

  ஆனால் எல்லா ஆசிரியர்களும் மாணவர்களின் வாழ்க்கையை ஏற்றுவதற்கு மட்டுமே பயன்படுகிறார்கள். இறங்குவதற்கு அல்ல எனவேதான் நான் ஆசிரியர்களை கேணி என்பேன். அதாவது தொட்டனைத்தூரும் மணற்கேணி போன்றது. ஒவ்வொரு ஆசிரியரும் அவரவர் மனசாட்சியின் படி பணியாற்றவேண்டும்.

   எத்தனையோ தனியார் பள்ளி ஆசிரியர்கள் தனியார் ஒருவரின் நீச்சல் குளத்தை நிரப்புகிறார்கள். ஆனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே ஏழை குழந்தைகளின் வயல் வெளியை நிரப்புகிறார்கள். ஒவ்வொரு மாணவனையும் ஊக்கப்படுத்தி அவனது திறமைகளை வெளிக்கொணர வைத்தல் ஆசிரியரின் கடமை.

  ஒவ்வொரு மாணவனையும் புலிக்கு பயந்து ஓடும் யானைகளாக இல்லாமல் போர்க்களத்தில் முன்னோக்கி செல்லும் களிறு ஆக மாற்றவேண்டும். ஒரு சிறந்த மாணவன் என்பவன் மதிப்பெண்களை விரும்பமாட்டான், பாடத்தை மட்டுமே விரும்புவான் என்றும் மதிப்பெண்களை பெறும் மாணவர்களை உருவாக்குவதைவிட ஒழுக்கத்திலும், பண்பிலும் சிறந்து விளங்கும் தலைசிறந்த மாணாக்கர்களை உருவாக்குங்கள் அதுவே இந்த தேசத்திற்கு இப்பொழுது தேவை.

  நல்லது நடக்கும் என்ற நல்ல எண்ணத்தோடு உழைப்போம் நல்லதே நடக்கும். Power of Positive Expectation என்ற எண்ணத்தோடு தினந்தோறும் வகுப்பறைக்கு செல்லுங்கள் நிச்சயம் இந்த ஆண்டு இம் மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் 100 என்பதில் மாற்றம் இல்லை.

No comments:

Post a Comment