Blogger news

Wednesday, 8 October 2014

தாகம் தீர்க்கும் பாலை, நல்லது தரும் காயா- மதுரை பேராசிரியையின் ஆராய்ச்சி - கே.கே. மகேஷ் (தி இந்து)



முல்லைப் பூவுக்கும், பிச்சிப் பூவுக்கும் என்ன வித்தியாசம் என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த நிலையில் சங்கப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள பூ இன்னதுதான் என்று அறிவியல்பூர்வமாக அறுதியிட்டுச் சொல்வது எவ்வளவு சிரமமான காரியம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே குறிஞ்சிப் பாட்டு 99 மலர்களைப் பதிவு செய்திருக்கிறது. சங்க இலக்கியம் முழுவதும் இறைவனைப் பாடவும், மன்னனைப் புகழவும் உவமையாகவும் ஏராளமான தாவரங்களைச் சங்கப் புலவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் சொன்னது எந்தத் தாவரம் என்ற குழப்பம் தொடர்கிறது.
இந்தப் பின்னணியில் சங்கப் பாடல்களில் 6 தாவரங்களை எடுத்துக்கொண்டு, புலவர்கள் பாடிய அந்தத் தாவரங்கள் எவை என்பதைச் சரியாக நிறுவி இருக்கிறார் மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத்தின் பேராசிரியை முனைவர் இரா. காஞ்சனா.

பேராசிரியை இரா. காஞ்சனா
 
தமிழும் தாவரவியலும்
"அடிப்படையில் நான் ஒரு அறிவியல் மாணவி. பி.எஸ்.சி தாவரவியல் படித்ததால், தாவரங்களைப் பற்றி நுணுக்கமாக அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. எம்.ஏ. தமிழில் சேர்ந்தபோது, இலக்கியங்களில் வரும் செடி, கொடிகளைப் பற்றி நிறைய சந்தேகங்கள் வந்தன. என் மனதைக் குடைந்து கொண்டிருந்த இந்தச் சந்தேகங்களுக்குத் தீர்வு காண ஆய்வில் இறங்கினேன்.
சங்க இலக்கியங்களில் சுமார் 350க்கும் மேற்பட்ட நிலையியல் உயிரினங்களைத் (தாவரம் என்பது வடமொழி, நிலையியல் உயிரினம் என்பது தமிழ்) பற்றி பாடப்பட்டிருக்கிறது. இதில் காந்தள், காயா, கரும்பு, வேங்கை, மரா, பாலை ஆகிய 6 தாவரங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டேன்.
ஒரே செடி அல்லது மலருக்கு வெவ்வேறு விதமான பெயர்கள், அர்த்தங்கள் விளக்கப்பட்டிருந்தன. என் தாவரவியல் படிப்பைப் பயன்படுத்தி எது சரியான கருத்து என்பதை நிறுவ வேண்டிய பொறுப்பு உருவானது.
சம்பந்தப்பட்ட தாவரத்தை நேரில் பார்த்தும் அறிந்தேன். 5 வருட ஆய்வுக்குப் பிறகு, அந்த 6 தாவரங்களைப் பற்றி 600 பக்கத்தில் ஆய்வு நூலையே எழுதிவிட்டேன்" என்கிறார் காஞ்சனா. அவர் ஆராய்ந்த அந்தத் தாவரங்கள்:
வேங்கை
வேங்கையில் செவ்வி வேங்கை (சிவந்த மலர்), பொன்வி வேங்கை (பொன்னிற மலர்) என்று இரண்டு வகைகள் உள்ளன. சங்க இலக்கியங்களில் இந்த மலர்களைப் பற்றி புலவர்கள் கவிநயத்துடன் பாடியுள்ளனர்.

வேங்கை மலர்கள்
 
பட்டறையில் பழுக்கக் காய்ச்சிய இரும்பைச் சுத்தியால் அடிக்கும்போது, தெறித்து விழுகிற துகள்களைப் போல இம்மரத்தில் இருந்து மலர்கள் உதிரும் காட்சி உள்ளதாக ஒரு புலவர் பாடியுள்ளார்.
பாறை மீது விழுந்து கிடக்கின்ற இந்தப் பூக்கள், படுத்திருக்கும் புலியைப் போலக் காட்சி தருவதாகவும், அதைக் கண்டு பெண்கள் அலறுவதாகவும் இன்னொரு பாடல் வர்ணிக்கிறது. இதன் அறிவியல் பெயர் pterocarpus marsupium.
காந்தள்
தோன்றி மலரின் மேல் பூத்துள்ள காந்தள் இதழ்களானது விளக்கைத் தூண்டிவிடும் பெண்களின் விரல்களை ஒத்திருப்பதாக (கார் தோன்றிப் பூவுற்ற காந்தள் முகை விளக்குப் பீர் தோன்றித் தூண்டுவாள் மெல்விரல் போல) திருமாலைநூற்றைம்பது பாடல் வர்ணிக்கிறது.

செங்காந்தள் மலர்
 
சங்க இலக்கியத்தில் மிக அதிகமாகப் பாடப்பட்ட மலர், காந்தள் மலர் தான். தமிழ்நாட்டின் மாநில மலராக அங்கீகரிக்கப்பட்ட இந்த மலர் மருத்துவக் குணங்கள் நிரம்பியது.
தமிழ் ஈழத்தின் அடையாள மாகவும், ஜிம்பாப்வே நாட்டின் தேசிய மலராகவும் இருக்கும் இந்தச் செங்காந்தளின் தாவர வியல் பெயர் gloriosa superba.
பாலை
ஐந்திணைகளில் ஒன்றான பாலை நிலத்துக்குப் பெயர் தந்தது இம்மரமே. கடும் கோடையிலும் தளிரும், மலருமாக இந்த மரம் காட்சி தரும். யானை தாகம் தீர்த்துக் கொள்ளப் பாலை மரப்பட்டை களைக் கிழித்து நீரை உறிஞ்சும்.

பாலை என்ற வெப்பாலை மலர்
 
பட்டை உரிக்கப்பட்ட மரம், தந்தம் போல வெண்மையாகக் காணப்படும். இதற்குத் தந்தப்பாலை என்ற பெயரும் உண்டு. வெப்பாலை என்றும் கூறுவார்கள். இதன் தாவரவியல் பெயர் wrightia tinctoria.
காயா
காயா மரத்தின் பூக்கள் நீல நிறத்தில் இருப்பதால், திருமாலுக்கு காயாம்பு வண்ணன்என்ற பெயருண்டு. குறைந்த நாட்கள் மட்டுமே மலரக்கூடிய தன்மை கொண்டது. அதை நல்ல நிமித்தமாகக் கருதிக் கொண்டாடும் வழக்கம் பண்டைத் தமிழகத்தில் இருந்திருப்பதைப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

காயாமரத்தின் நீலப் பூக்கள்
 
இதே போல வருடத்தில் குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே செர்ரி மரம் பூப்பதை ஜப்பானியர்கள் விழாவாகவே கொண்டாடுகிறார்கள். Iron wood tree இதன் ஆங்கிலப் பெயர். மதுரை மாவட்டம் அழகர் மலையிலும், மேற்குத் தொடர்ச்சி மலையிலும் காயா மரங்கள் உள்ளன. இதன் தாவரவியல் பெயர் Memecylon edule.
மரா மரம்
மரா மரம் (ராமனின் வில் திறத்தைச் சோதிக்க இலக்காக்கப்பட்ட வலிமையான மரம்) பற்றி கம்பராமாயணத்தில் தனிப் படலமே உள்ளது. இந்த மரம் தமிழகத்தில் அதிகம் இல்லை என்பதால், நம்மவர்களுக்குப் புரிய வேண்டுமே என்று மரா மரத்தைப் பற்றி நிறைய தகவல்களைச் சொல்லியிருக்கிறார் கம்பர்.

கரும்பு
இது இந்தியாவின் பாரம்பரியப் பயிர் கிடையாது என்றாலும், சங்க இலக்கியங்களில் பல இடங்களில் கரும்பின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.நிலத்துக்கு அணியென்ப நெல்லுங் கரும்பும்' என்கிறது நான்மணிக்கடிகை.
தேவலோகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது கரும்பு என்று, ‘அந்தரத்து அரும்பெறல் அமிழ்தம் அன்னக் கரும்பிவட் தந்தோன்என ஔவையார் பாடியுள்ளார். ஆனால், அந்தரத்து என்ற வார்த்தைக்கு கடல் கடந்து' என்ற பொருத்தமான விளக்கத்தைத் தந்துள்ளார் உ.வே.சா.
அழகர் கோயில் பகுதியில் அக்காலத்திலேயே கரும்பு பற்றிய செய்தி கிடாரிபட்டியில் உள்ள கல்வெட்டில் இடம்பெற்றுள்ளது. நெல்லுக்கு ஊடுபயிராகக் கரும்பைப் பயிரிட்டது, குழிநடவு முறை போன்ற தொழில்நுட்பங்களைப் பற்றியும் பதிவு உள்ளது. கரும்பின் தாவரவியல் பெயர் saccharum officinarum.

No comments:

Post a Comment