Blogger news

Friday, 7 November 2014

10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவரின் சாதனை: குழந்தைகளுக்கான 17 படைப்புகளை வெளியிட்டுள்ள காஸ் விநியோக ஊழியர் by என்.சுவாமிநாதன்


பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த காஸ் சிலிண்டர் விநியோக ஊழியர் ஒருவர், குழந்தைகளுக்கான 17 சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். தமிழக அரசின் பொது நூலகங்களில் இவர் எழுதிய படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

இச்சாதனைக்கு சொந்தக்காரர் நாகர்கோவிலை அடுத்த கோதை கிராமத்தைச் சேர்ந்த குழந்தை எழுத் தாளர் கோதை சிவகண்ணன். கிராமம் கிராமமாக வீடுகளுக்கு காஸ் விநியோகம் செய்யும் பணி அவருக்கு.

காஸ் சிலிண்டரை தோளில் சுமந்து கொண்டே பேசத் தொடங்கினார்.
‘`என்னோட இயற்பெயர் லட்சு மணன். மிகவும் ஏழ்மையான குடும்பத் தில் பிறந்தேன். அப்பா கூலித் தொழிலாளி. உடல் நலமின்மையால் அவரால் வேலைக்குப் போக முடியாத நிலை. எனக்கு 2 தங்கை, ஒரு தம்பி. ஏழ்மை காரணமாக 5-ம் வகுப்பு படிக்கும்போதே விடுமுறை நாள்களில் நெசவுக்கு செல்வேன்.

குடும்ப சூழலின் அழுத்தத்தால் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற முடியவில்லை. அத்துடன் படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு லோடுமேன் வேலைக்கு வந்துவிட்டேன். கோட்டாறு கடைவீதியில் கடைகளுக்கு சரக்குகள் எடுத்துவரும் வேலை பார்த்தேன். இப்போது ஹெச்.பி. நிறுவனத்தில் காஸ் விநியோக ஊழியராக இருக்கி றேன்.

படிக்க முடியாத வேதனை ஒரு கட்டத்தில் எனக்குள் ஏக்கமாக மாறிப் போயிருந்தது. அதன் பின் வாசிப்பதற்காக நூலகங்களுக்கு செல்லத் தொடங்கினேன். ராமலிங்க அடிகளார், கண்ணதாசன், குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா ஆகியோரின் எழுத்துகள் என்னை மிகவும் ஈர்த்தன. தமிழ் மொழியின் மீது என் நாட்டம் கூடியது.

தமிழ் என்பது வெறும் மொழி மட்டு மல்ல. அது அன்பின், நம் பண்பாட்டின் அடையாளம். ஆனால் குழந்தைகளை தமிழ் வழியில் சேர்ப்பதே அவமானம் என்று பெற்றோர் நினைப்பதை என்னவென்று சொல்வது?

`குழந்தைகளை தமிழ் வழி பள்ளியில் சேருங்கள்’ என நண்பர்களிடம் கூறிய போது, `பைத்தியம்’ என்றார்கள். அப்படியானால் குழந்தைகளிடத்தில் நன்னெறிகளையும், ஒழுக்கத்தையும் தாய் மொழியில் கொண்டு சேர்ப்பது எப்படி என்ற தாகம் என்னை எழுதத் தூண்டியது.

கண்மணிகளுக்கான கருத்து கதைகள், குழந்தைகளுக்கான குரு சிஷ்ய கதைகள், விலங்குகள் கூறும் விசித்திர கதைகள், நல்ல நல்ல நெடுங்கதைகள் உள்பட 17 கதை தொகுப்புகளை குழந்தைகளுக்காக எழுதி வெளியிட்டுள்ளேன். ஆரம்பத் தில் கோதை சிவக்கண்ணன் என்ற பெயரில் எழுதி வந்தேன்.

புனைப்பெயரில்

எனக்கு தோளோடு தோள் கொடுத்து, என் முயற்சிக்கு வலு சேர்த்தது என் மனைவி உலகம்மாள். அதனால் `உலகம்மா’ என்ற புனைப்பெயரில் தற்போது எழுதி வருகிறேன்.
தினசரி காலை 7 மணிக்கு காஸ் சிலிண்டரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு லைனுக்கு வந்து விடுவேன். பணி முடித்து ஏஜென்சிக்கு சென்று பணத்தை கொடுத்துவிட்டு வீடு திரும்பும்போது இரவு 7 மணி தாண்டிவிடும். அதன் பின் ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பேன். இரண்டு மணி நேரம் எழுதுவேன்.

பத்தாம் வகுப்பில் தோல்வி அடைந்த நான் இன்று எழுதும் புத்தகங்களை பிறர் பாராட்டும்போது மனதுக்கு நிறைவு தருகிறது. இன்று பிறந்தநாள் காணும் குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பாவைப்போல் சிறந்த குழந்தை எழுத்தாளர் என பெயர் எடுப்பதுதான் லட்சியம்.
அந்த தீபத்தை ஏந்தி ஓடுவது ஒரு பக்கம் இருந்தாலும், வாழ்க்கைக்காக லோடு டெலிவரிமேனாகவும் விரும்பியே ஓடிக் கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

No comments:

Post a Comment