சேரளம் என்ற தமிழ் வார்த்தைக்கு மலைச்சரிவு என அர்த்தம். அதிலிருந்துதான் சேரநாடு வந்திருக்க வேண்டும் என்ற கருத்து உள்ளது. இன்றைய கேரளாவின் பழைய பெயரே சேர நாடு.
பழங்காலம்
கேரளத்தின் இடுக்கி,வயநாடு மாவட்டங்களில் கற்கால மனிதர்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிந்துசமவெளி நாகரிகத்துக்கும், சுமேரிய நாகரிகத்துக்கும் இடையே கேரளத்துக்குத் தொடர்புகள் இருந்துள்ளன.
2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த பேரரசர் அசோகரின் கல்வெட்டில் “கேரளா - கேரளபுத்திரர்” எனப் பொறிக்கப்பட்டுள்ளது. ரோமானிய வணிகர் பெரிபுரூஸ் தனது வரைபடத்தில் இன்றைய கேரளப் பகுதியை சேரபுத்ரா என்கிறார். கேரள மக்கள் மலையாளிகள் என்றும் அழைக்கப்படுகின்றனர். மலையில் வாழ்பவர்கள் என்பதே அதன் பொருள்.
சுதந்திரத்துக்கு முன்
போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள் எனப் பல ஐரோப்பியர்கள் கேரளத்தில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினர். கேரளம் திருவிதாங்கூர், கொச்சி மற்றும் மலபார் என மூன்று சமஸ்தானங்களாக 1947-க்குப் பிறகு இருந்தது.
மலபார் சீரமைப்புச் சட்டம் 1956-ன்படி, நவம்பர் 1, 1956-ல் இந்தியாவின் தென்மாநிலங்களுள் ஒன்றாகக் கேரளம் உதித்தது.
இது கிழக்கில் தமிழ் நாட்டையும், வடக்கில் கர்நாடகத்தையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேற்கில் அரபுக் கடல் உள்ளது.
கல்வியும் கலைகளும்
94.59 பேர் கேரளாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். இந்திய மாநிலங்களில் கேரளாவே எழுத்தறிவில் முதலிடம். மலையாளம் கேரளா வின் முதன்மையான மொழியாகும். தமிழ் பேசுவோரும் அதிகமாகக் காணப்படுகினறனர்.
இந்த மாநிலத்தில் 5 ஏப்ரல் 1957 -ல் தேர்தல் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தது. ஆசியாவின் முதல் அரசியல் சாதனையாக இது இருந்தது.
இந்தியாவின் முக்கியமான தத்துவஞானியான ஆதி சங்கரர் (கி.பி.788-82) பிறந்த இடமான காலடி கேரளத்தில்தான் உள்ளது. ரப்பர் உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி மாநிலம். இந்தியாவின் நறுமணத் தோட்டம் எனப் புகழப்படுகிறது.
விவசாயம் முக்கியமான தொழில். உணவுப் பொருள் சாகுபடியைவிடப் பணப்பயிர் சாகுபடி அதிகரித்துவருகிறது. பாரம்பரிய தொழில்களான கைத்தறி, கயிறு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற தொழில்களும் சிறப்பாக நடைபெறுகின்றன.
கேரளத்தில் இந்துக்கள் சுமார் 56 சதவீதம் பேர். சுமார் 25 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் உள்ளனர். 19 சதவீதம் பேர் கிறிஸ்துவர்கள். சிறந்த பாரம்பரியக் கலை களான கதகளி நடனத்துக்கும் களரிப்பயிற்று தற்காப்புக் கலைக்கும் தாய்பூமி இது. கூடியாட்டம், கேரள நடனம், மோகினியாட்டம், தெய்யம், துள்ளல் ஆகியவையும் கேரளத்தின் நாட்டிய வகைகளாகும். வர்மக்கலை போன்ற தற்காப்புக் கலைகளும் கேரளத்தில் தோன்றியவையே.
ஓணமும் விஷுவும் கிறிஸ்துமஸும் ரமலான் பெருநாளும் கேரளத்தின் முக்கிய பண்டிகைகள். கடவுளின் நாடு என வர்ணிக்கப்படுகிறது கேரளா. உலக அளவில் சுற்றுலா பயணிகளைக் கவரும் காந்தம் அது!
No comments:
Post a Comment