கற்றல்
பொதுவாய் நான்கு விதங்களில் நிகழ்வதாக உளவியல் சொல்கிறது.
1. பயிற்சியின் மூலம் பழக்கப்படுத்தப்படுதல்
2. பார்த்துக் கற்றுக்கொள்ளல்
3. நன்மை தீமைகளை அறிவின் மூலம் பகுத்து உணர்தல்
4. நன்மை தீமைகளைச் செய்து பார்த்து உணர்தல் நான் ஆறு வருடத்திற்கு முன் என் முதுநிலை உளவியல் படிப்பில் தேர்வுக்காகப் படித்தது! நன்றாக நடத்திய ஆசிரியரின் புண்ணியத்தால் இன்னும் ஞாபகம் இருக்கிறது!
2. பார்த்துக் கற்றுக்கொள்ளல்
3. நன்மை தீமைகளை அறிவின் மூலம் பகுத்து உணர்தல்
4. நன்மை தீமைகளைச் செய்து பார்த்து உணர்தல் நான் ஆறு வருடத்திற்கு முன் என் முதுநிலை உளவியல் படிப்பில் தேர்வுக்காகப் படித்தது! நன்றாக நடத்திய ஆசிரியரின் புண்ணியத்தால் இன்னும் ஞாபகம் இருக்கிறது!
அனுபவங்கள்
12- வகுப்பு முடிந்தவுடன் வேலைக்குச் செல்ல
ஆரம்பித்ததிலிருந்து 10 ஆண்டுகள் பல நிறுவனங்களில் பலவிதமான
தலைவர்களுக்குக் கீழ் நான் வேலை பார்த்திருக்கிறேன். சில நிறுவனங்களில் எனக்கு
நேர்ந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.
(i) முறையான பயிற்சி என்று எனக்கு எதுவும் கொடுக்க
மாட்டார்கள். ஏன் என்று கேட்டால் அதெல்லாம் வேலை செய்யும் போது தானாகக்
கற்றுக்கொள்வாய், எதுவாக இருந்தாலும் என்னைக் கேட்டுச் செய்
என்று சொல்லி விடுவார்கள். ஏதாவது தவறு செய்தால் உடனே குறுகிய கால உடனடி பயிற்சி
என்ற பெயரில் நான் செய்த தவறுகளைக் குத்திக் குத்திக் காண்பிப்பார்கள்.
(ii) எனக்கு முன்மாதிரியாகவே இருக்கமாட்டார்கள்.
கொள்கைகள் என்று எதுவும் இல்லாது தனக்குத் தோன்றுவதையெல்லாம் செய்யுமாறு எனக்குக்
கட்டளை இடுவார்கள். அவர் ஒரு முறை சொன்னதை அவர் வகுத்த கொள்கையெனக் கொண்டு செயல்
பட்டால், ஏன் நீயாகக் கருதிக்கொள்கிறாய் என்று பின்னர்க்
கேள்வி கேட்பார்கள்.
(iii) ஏன் ஒன்றைச் செய்ய வேண்டாம் என்கிறார்,
ஏன் வேறு ஒன்றைச் செய்யச் சொல்கிறார் என்ற கேள்விகளுக்கு விடைகளைச்
சொன்னதே கிடையாது. அவர்களது முடிவுகளை என் அறிவின் மூலம் பகுத்து ஆராய எனக்கு
வாய்ப்பளிக்கவே மாட்டார்கள். நமக்குத்தான் சரியாய் வேலை செய்யத் தெரியவில்லை,
ஆகவே ஒவ்வொரு முறையும் அவர்களைக் கேட்டே செய்து விடலாம் என்று
கேட்கப்போனால் “ஏன் ஒவ்வொரு முறையும் என்னைக் கேட்டுச்
செய்கிறாய், உனக்குச் சொந்தப் புத்தி கிடையாதா?” என்று சொல்லாமல் சொல்வார்கள்.
(iv) சரி! நாமாகச் செய்து பார்த்துக்
கற்றுக்கொள்ளலாம் என்றால், ஓரிரு தவறுகள் நடக்கும். வந்து
விழும் “என்னைக் கேட்டுத்தானே செய்யச் சொன்னேன், நீயாக எதற்குச் செய்தாய்?!” என்ற பழைய அத்தியாயம்.
எப்போது நான் தவறு செய்வேன், உட்புகுந்து தன் அதிகாரத்தை
நிலை நாட்டலாம் என்று காத்திருப்பார்கள்.
இவை தொடர்ந்து நடக்க, ‘கேட்டுச்
செய்-சுயமாய் செய்-கேட்டு செய்’ என்ற சுழலில் நான் சிக்கிச்
சின்னாபின்னம் ஆகி அங்கிருந்து ஓடினால் போதும் என்று சம்பளத்தைக் கூட வாங்காமல்
ஓடி வந்து விடுவேன்.
கற்றல் இல்லை
உளவியல் கூறும் நான்கு கற்றல் முறைகளில் ஒன்றில்கூட எனக்குக்
கற்றல் நிகழவில்லை. முறையான, முழுமையான பயிற்சி
அளிக்கப்படவில்லை. முன்மாதிரியாகவோ, கொள்கை ரீதியாகவோ
வழிகாட்டிகள் யாரும் இல்லை. சுயமாய்ச் சிந்தித்துச் செயல்பட வாய்ப்புகள் எதுவும்
கொடுக்கப்படவில்லை. செய்து கற்றுக்கொள்ளலாம் என்றால் அதில் சகஜமாக நிகழ்ந்த
தவறுகள் பெரிதுபடுத்தப்பட்டன.
தலைவர் என்றால்
(i) பின்பற்றுபவருக்கு முறையான, முழுமையான பயிற்சி அளிப்பதற்கான திறன் இருக்க வேண்டும்.
(ii) பின்பற்றுபவர்களுக்கு முன்மாதிரியாகவும்,
சீரான கொள்கைகளுடனும் இருக்க வேண்டும்.
(iii) ஏன் ஒன்றைச் செய்ய வேண்டும், இன்னொன்றைச் செய்யக் கூடாது என்று அவர்களது கருத்தைப் பின்பற்றுபவர்களுக்குத்
தெரியப்படுத்த வேண்டும். அவர்களில் கருத்துகளை அறிவின் மூலம் பகுத்து ஆராயப்
பின்பற்றுபவருக்கு வாய்ப்புகள் தரப்பட வேண்டும்.
(iv) முறையான, முழுமையான
பயிற்சி அளிக்க முடியாமல் போனால், வேலையைச் செய்யும் போது பல
தவறுகள் நடக்கும், அப்படித் தவறுகள் நிகழும்போது அவற்றைப்
போட்டுக் குத்திக் குடையாது சரியான முறையைக் கற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பாக
எடுத்துக்கொண்டு முறையாகப் பயிற்சி தர வேண்டும். பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில்
தான் சொல்வதைத்தான் செய்ய வேண்டும் என்று கூறாது, அழுத்தங்கள்
தராது வேலையைக் கற்றுக்கொள்ளப் போதுமான நேரமும், சுதந்திரமும்
தர வேண்டும்.
இந்த நாடாகட்டும், உங்கள் வீடாகட்டும், உங்கள் வேலை பார்க்கும் இடமாகட்டும். இந்த நான்கு விஷயங்களையும் உங்கள்
தலைவர் செய்கிறாரா? ஆம் எனில் அவர் லீடர். இல்லையெனில் அவர்
பாஸ். அதிலும் தலைக்கனம் கொண்ட பாஸ்.
- இராம. கார்த்திக் லெட்சுமணன், உளவியல் ஆலோசகர்
No comments:
Post a Comment