# குளிர்காலத்தில் சருமத்தின் மென்மை, நெகிழ்வுத் தன்மையைப் பராமரிக்கச் சோப்புக்குப் பதிலாகக் கடலை மாவைப் பயன்படுத்தலாம்.
# குளிர்காலத்தில் கூந்தல் அதிகமாக வறண்டுவிடுவதுடன் ஓரங்களில்
வெடித்துப்போய் அதிக முடி இழப்பை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க இளஞ்சூடான
ஆலிவ் எண்ணெயைத் தலையில் தடவி, மசாஜ் செய்து ஊறிய பிறகு குளிக்கலாம்.
# சிலருக்குக் குளிர் தாங்காமல் தசைப்பிடிப்பு ஏற்பட்டு வலி உண்டாக
வாய்ப்புகள் உண்டு. வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பு கலந்து, அதைத்
துணியால் நனைத்துப் பிடிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒத்தடம் கொடுத்துவந்தால்
நிவாரணம் கிடைக்கும்.
# குளிர்காலத்தில் பலருக்குப் பாதங்களில் உண்டாகும் பனி வெடிப்பால்
ஏற்படும் வலி நீங்க எளிய மருந்து, 50 கிராம் நல்லெண்ணெயை நன்றாகப் புகை
வரும்படி சூடு செய்து அதில் 2 அங்குல நீளமுள்ள மெழுகுவர்த்தியைத் தூள்
செய்து போடவும். சூடு ஆறியதும் அதை எடுத்து வெடிப்பின் மீது தடவினால்
விரைவில் வலி நீங்கிவிடும்.
# குளிர்காலத்தில் பாத வெடிப்பு ஏற்படுவதைத் தடுக்க, ஒரு பக்கெட்
சுடுநீரில் சிறிது உப்பு போட்டுக் கால் பாதங்களைப் பத்து நிமிடங்கள்
வைத்து, பிறகு பாதங்களை நன்கு துடைத்துவிட்டு மாய்சுரைசிங் கிரீம் அல்லது
ஹேண்ட் அண்ட் பாடி லோஷனைத் தடவிவரலாம்.
# குளிர்காலம் வரும்போது, மூட்டு வலியும் வரும். வேப்ப எண்ணெயைச் சூடாக்கி
வெற்றிலையை வதக்கித் தடவி மூட்டில் பத்துபோல் போட்டுக்கொண்டால் சிறிது
நேரத்தில் வலி குறைய ஆரம்பித்துவிடும்.
# குளிர்காலத்தில் ஏற்படும் தலைவலியைப் போக்க, ஒரு கல்லில் சிறிதளவு
வெந்நீர்விட்டுச் சுக்கை உரசி விழுதாக எடுத்து நெற்றியில் பற்றுப் போடலாம்.
# குளிர்காலத்தில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சினை உதடு
வெடிப்பு. இதற்கு பெட்ரோலியம் ஜெல்லியை உதட்டில் தடவலாம். அல்லது கரும்பு
சக்கையை எரித்து அதை வெண்ணெயில் குழைத்து உதட்டில் தடவலாம். இதனால் உதட்டு
வெடிப்பு குணமாவதோடு, கூடுதல் மென்மை கிடைக்கும்.
# குளிக்கப் பயன்படுத்தும் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்
சேர்த்துக்கொள்ளுங்கள். இது, குளிப்பதால் ஏற்படும் ஈரப்பத இழப்பை மீண்டும்
பெற இது உதவும். மிகவும் சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனென்றால், மிகவும் சூடான நீரில் குளிப்பதால் உடலின் இயற்கையான எண்ணெய்ப்
பசை குறைந்துவிடும்.
# ஜலதோஷத்தால் முகம் கனத்திருப்பவர்கள், விரலி மஞ்சளைப் பொடி செய்து
அதனுடன் கொஞ்சம் வேப்பிலை சேர்த்து ஒரு பானை தண்ணீரில் வேகவைக்கவும். நன்கு
கொதித்தவுடன் ஆவி பிடித்தால் சைனஸும் ஜலதோஷமும் பறந்துவிடும். ஆவி
பிடிக்கும்போது யூகலிப்டஸ் ஆயிலைக் கலந்துகொள்வது நல்லது.
# தேநீர் தயாரிக்கும்போது அத்துடன் சிறிதளவு துளசி இலைச் சாறு,
சர்க்கரைக்குப் பதிலாகத் தேன் ஆகியவற்றைக் கலந்து அருந்தினால் ஜலதோஷம்
நீங்கும்.
# குடிப்பதற்கு வெந்நீர் காய்ச்சும்போது சில துளசி இலைகளுடன் சிறிதளவு ஓமம்
போட்டுக் காய்ச்சினால் மணமாக இருப்பதுடன் ஜலதோஷம் பிடிக்காது
.
# தொண்டையில் கரகரப்பு, வலி இருந்தால் சமையல் உப்பை வெதுவெதுப்பான நீரில் கரைத்து வாய் கொப்பளிக்கலாம்.
-என். ஜரினா பானு
No comments:
Post a Comment