Blogger news

Wednesday 31 December 2014

திருஉத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனம் ஜனவரி 5-ந்தேதி நடைபெறுகிறது - தினத்தந்தி



ராமநாதபுரம், டிச.29-
வைகை என்னும் பொய்யா குலக்கொடி - வேகவதி - புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி இவ்வாறு அன்று வாழ்ந்த தமிழ் புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டது வைகை ஆற்றின் முகத்துவாரமான ராமநாதபுரம். இங்கு மகுடமாக அமைந்திருப்பது திருஉத்தரகோச மங்கை திருத்தலம்.

ஆதி சிதம்பரம்

இலக்கிய சிறப்பும், இதிகாச பெருமையும் கொண்டு விளங்கும் இந்த திருஉத்தரகோசமங்கை தொல்காப்பிய காலத்துக்கு முந்தைய தொன் மை வாய்ந்தது. இந்து மதவேதங்களிலும் புராணங் களிலும் உலகில் சிவபெருமான் உறையும் முதல் திருத்தலம் இதுதான் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் காரணமாக இந்தகோவில் ஆதிசிதம்பரம், பூலோக கைலாயம், சிற்றம்பலம், பொன்னம்பலம் என்றெல்லாம் புகழ்ந்து போற்றப்படுகிறது.

இந்த புண்ணிய தலமான திருஉத்தரகோசமங்கை ராமநாதபுரத்தில் இருந்து தென்மேற்கே 10 மைல் தொலைவில் உள்ளது. உயர்ந்து நிற்கும் கோபுரம், மாட வீதிகள், மணிமண்டபங்கள், எழிற்கூடங்கள், நீண்ட நெடிய தாழ்வாரங்களுடன் கண்ணைக் கவரும் வகையில் காட்சி தருகிறது. மண்எட்டும் புகழ் பரப்பும், விண் எட்டும் கோபுர விமானம், கர்ப்ப கிரகம் அன்றைய தமிழர்களின் நுண்ணிய கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

பிரபஞ்சத்தின் முதல் பூபாகம்

தமிழ் வளர்த்த சமய குரவர்கள் நால்வர் களில் ஒருவரான மாணிக்க வாசகர் அவரின் தெய்வீக பாடல்களில் மண் முந்தியோ மங்கை (திரு உத்தரகோசமங்கை) முந்தியோஎன்று பழம் பாடல்களில் குறிப்பிட்டு கூறுவதில் இருந்து இந்த ஊர் பிரபஞ்சத்தின் முதல் பூபாகம் என்று உறுதிபட நம்புகிறார்கள். திருஉத்தரகோசமங்கை திருத் தலத்தின் புராண வரலாறு ஒவ்வொருவரையும் புல்லரிக்க வைக்கிறது. காலங்களை வேத காலம், இதிகாச காலம், சங்க காலம், சரித்திர காலம் என்று பிரிக்கிறார்கள். இந்த திருத்தலத்தின் வேதகால புராண நிகழ்வுகளும், இறைவனின் திருவிளையாடல்களும் இந்த உத்தரகோசமங்கை மண்ணில்தான் நடைபெற்று உள்ளது என்று இந்து சமய ஆன்மிக அறிஞர்கள் உறுதிபட நம்புகிறார்கள்.

திருஉத்தரகோசமங்கை கோவிலில் உள்ள சிவ லிங்கம் சுயம்புவாக உருவானது. ராமபிரா னின் மூதாதையர்களினால் உருவாக்கப்பட்ட இந்த கோவில் பகுதியில் முனிவர்களும், ரிஷிகளும் தங்கி இறைவனை வழிபட்டதாக கூறும் வரலாற்று நிகழ்வுகள் வேத வரிகளில் காணப்படுகிறது. இறை வழிபாட்டை துறக்காத 1000 முனிவர்கள் சிவபெருமானை துதிக்கவும், தவம் செய்யவும் இந்த இடத்தை தான் தேர்வு செய்தார்கள்.

மண்டோதரி

இந்த முனிவர்கள் திருஉத்தரகோசமங்கை தடாகத்தின் அருகே கடும் தவம் மேற்கொண் டனர். இவர்களின் தவத்தின் வலிமையை உணர்ந்த சிவ பெருமான் அசரீரியாக சொன் னார். தவசேஷ்டர்களே பெண்ணின் நல்லாள், மண்ணு புகழ் மண்டோதரி என்னை (சிவன்) பாலக வடிவில் காண இலங்கையில் கடும் தவம் புரிந்து வருகிறாள். அவளுக்கு காட்சியளித்து விட்டு திரும்பி வருகிறேன். இதற்கிடையே மண்டோதரியின் கணவன் இலங்கை அரசன் ராவணன் என் உடலை தீண்டினால் அப் போது இந்த தடாகத்தில் அக்னி ஜுவாலை பற்றி எரியும். இவ்வாறு அசரீரி ஒலித்தது.

தவத்தில் திளைத்திருந்த மண்டோதரி சிவனை பாலகனாக காண விரும்பியதால் மண்டோதரி முன்பு ஆதிசிவன் முத்துமணி பல்லக்காக முளைத் தெழுந்த சிறுகீரையாக தத்துங்கிளி போல் தோன்றி னார். பலவண்ண பாலகன் தத்தி, தத்தி நடந்து செல்வதை கண்டு மண்டோதரி உள்ளத்தில் உவ கை பொங்கியது. சிறுவனின் வண்ண வடிவழகில் எண்ணத்தை பறிகொடுத்து சிலையாக நின்றாள். அப்போது அங்கு வந்த ராவணன் குழந்தையின் அழகில் உள்ளத்தை பறிகொடுத்து வாரி அணைத்து மகிழ்ந்தான். அப்போது அதே நேரத்தில் உத்தர கோசமங்கை தடாகத்தில் அக்னி ஜோதி எழுந்தது. முனிவர்கள் இந்த ஜோதியில் கலந்தார்கள்.

மாணிக்கவாசகர்

1000-ம் முனிவர்களில் ஒருவர் மட்டும் அக்னி குழம்பில் விழாமல் ஆகம வரிகளை கற்றுணர்ந்த வண்ணமாக இருந்தார். அவர் தான் பின்னாளில் மாணிக்கவாசகராக அவதரித்து திருஉத்தரகோச மங்கை தலத்தில் நாளெல்லாம் பரமனை பாடி பரவசமடைந்தார் என்று புராணங்களில் கூறப்படு கிறது. மாணிக்கவாசகர் அவரின் திருவாசக திரு மறையில் 38 இடங்களில் திருஉத்தரகோசமங் கையை பாடி அங்கு உறையும் இறைவனையும், இறைவியையும் வணங்கிஉள்ளார். ஆதி காலத்தில் எப்படி தன்னை காண கடும் தவம் மேற்கொண்டு அக்னி ஜுவாலையில் ஐக்கியமான 999 முனிவர்க ளும் இறைவனோடு கலந்தார்களோ அதேபோல மாணிக்கவாசகரையும் இறைவன் ஆட்கொண்டார்.

இலங்கையில் இருந்து திரும்பி வந்த சிவன் அக்னியில் கலந்த அனைத்து சீடர்களையும் எழுப்பி அவர்களுக்கு சிறப்பு செய்ய அவர்களோடு ஐக்கிய மாகி திருஉத்தரகோசமங்கையில் சகஸ்ரலிங்கமாக (1008 லிங்கம்) காட்சி தருகிறார் என்று புராணங்க ளில் கூறப்படுகிறது. இவ்வளவு புராண புகழ் பெற்ற இந்த கோவிலின் தல விருட்சம் இலந்தை மரம். காலங்கள் கடந்த இந்த மரம் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.

அபூர்வ மரகத சிலை

இந்த கோவிலின் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகத கல்லினால் ஆன ஆளுயர ஆடும் திருக்கோலத்தில் உள்ள விலை மதிக்க முடியாத அபூர்வ நடராஜர் சிலை உள்ளது. தமிழர்களின் கலைத்திறனுக்கும் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுக்கும், கட்டி யம் கூறும் வகையில் கண்கவர் காட்சியளிக்கும் அபூர்வ சிலை இது. ஒளி வெள்ளத்தில் சிலையை உற்றுப்பார்த்தால் சிலை உயிரோடு உள்ளது போல தோன்றும். உடலில் பச்சை நரம்புகள் எப்படி கண்ணுக்கு தெரிகிறதோ, அப்படி அந்த சிலையிலும் தெரிகின்றன.

நவரத்தினங்களில் ஒன்றான பச்சை கல் இயல் பாகவே மென்மையானது. ஒளி, ஒலி அதிர்வுகளை தாங்க முடியாத தன்மை உடையது. இதன் காரண மாக மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்று சொல்வார்கள். எனவே இந்த நடராஜர் சிலையை ஒளி, ஒலி அதிர்வுகளில் இருந்து அந்த சிலை முழுவதும் சந்தன கலவையை பூசி பாதுகாத்து வருகிறார்கள். வருடத்தில் ஒருநாள் அதுவும் சிவ னுக்கு உகந்த நாளான திருவாதிரை நாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத் திற்காக சந்தன கவசம் களையப்படும்.

ஜனவரி 5-ந்தேதி

இதன்படிவருகிற 4-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் மரகத நடராஜரின் பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்படுகிறது. இதைத் தொடர்ந்து இரவு வரை நடராஜருக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை கள் நடைபெறும். இரவு 10 மணிக்கு ஆருத்ரா அபிஷேகம் நடக்கிறது. 5-ந்தேதி ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. பின்னர் நடராஜர் மீது மீண்டும் சந்தனம் பூசப்பட்டு தீபாராதனை நடைபெறும். விழாவையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். விழா ஏற்பாடுகளை ராணி பிரம்ம கிருஷ்ண ராஜேசுவரி உத்தரவின் பேரில் திவான் மகேந்திரன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர். விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி தலைவர் நாகராஜன் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment