Blogger news

Saturday, 27 December 2014

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி) நடத்தி வரும் தேர்வு முறையை ஆன்லைனில் நடத்த பரிந்துரை: 10 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்க அரசுத் துறைகளுக்கு உத்தரவு

மத்தியப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) நடத்தி வரும் தேர்வு முறையை "ஆன்லைனில் நடத்துவது' உள்பட, நிபுணர் குழு அளித்துள்ள பரிந்துரைகள் குறித்து 10 நாள்களுக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அனைத்து அரசுத் துறைகளுக்கும் மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, எஸ்எஸ்சி தேர்வு முறையை மேம்படுத்துவது தொடர்பாக மத்தியப் பணியாளர் தேர்வாணைய முன்னாள் உறுப்பினர் ஐ.எம்.ஜி. கான் தலைமையிலான நிபுணர் குழுவை மத்திய அரசு கடந்த பிப்ரவரியில் நியமித்தது. இக்குழு பல்வேறு நிலைகளில் ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை மத்திய அரசிடம் அளித்தது.

நிபுணர் குழு பரிந்துரைகள்: தேசிய அளவிலான தேர்வு, அதில் தொழில்நுட்ப ரீதியாக எதிர்கொள்ளப்படும் பிரச்னைகள், எஸ்எஸ்சி தேர்வு தொடர்பான விழிப்புணர்வு, மத்திய ஆயுதக் காவல் படை (சிஏபிஎஃப்) பணிகளுக்கான தேர்வு முறைகள் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து நிபுணர் குழு, அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்துள்ளது.

மத்திய ஆயுதப் படைகள் தேர்வுக்கான "செயல் நடவடிக்கை குழு' ஏற்கெனவே அளித்திருந்த பரிந்துரைப்படி, +2 கல்வித் தகுதிக்கு கீழான கல்வித் தகுதிக்கான பணியிடங்களை எஸ்எஸ்சி நடத்தக் கூடாது என்று கூறியிருந்தது. அதை ஐ.எம்.ஜி. கான் தலைமையிலான குழு ஏற்றுக் கொண்டது.

மேலும், "மத்திய உள்துறை ஒப்புதல் தெரிவித்தால், காவலர் போன்ற பணியிடங்களுக்கான தேர்வை மத்திய ஆயுதப் படையே நேரடியாக நடத்திக் கொள்ளலாம். மத்திய உள்துறை ஒப்புதல் தெரிவிக்காவிட்டால், நக்சல், தீவிரவாத அச்சுறுத்தல் நிலவும் மாவட்டங்கள் நீங்கலாக, பிற பகுதிகளில் "ஆன்லைன்' மூலம் எஸ்எஸ்சி தேர்வு நடத்தி 60 சதவீத இடங்களை நிரப்பலாம். மீதமுள்ள 20 சதவீத இடங்களை எல்லைப்புற மாவட்டங்களிலும், அடுத்த 20 சதவீத இடங்களை இடதுசாரிப் பிரிவினைவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களிலும் தேர்வெழுதுவோரிடம் விண்ணப்பம் பெற்று தேர்வு நடத்தலாம். இதில், முன்னேற்றம் ஏற்படாவிட்டால் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி இடங்களை நிரப்பலாம்' என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

தேசிய அளவிலான தேர்வு, தொழில்நுட்ப முறை தொடர்பான பரிந்துரையில் "எஸ்எஸ்சி தேர்வை தாமதமின்றி ஆன்லைனில் நடத்த வேண்டும். யுபிஎஸ்சி தேர்வெழுதுவோர் முதல் முறையாகத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது ஆன்லைனில் அவர்களின் விவரங்களைப் பதிவு செய்வது போல, எஸ்எஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதும் தேர்வெழுதுவோர் ஆன்லைனில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். இதிலிருந்து வடகிழக்கு மாநிலங்கள், எல்லைகளில் தொலைத்தொடர்பு, இணையவசதி இல்லாத பகுதிகளில் இருந்து தேர்வெழுத விண்ணப்பிப்போருக்கு மட்டும் விலக்கு அளிக்கலாம். எஸ்எஸ்சி தேர்வுக்கு "மொபைல் அப்ளிகேஷன்' மூலம் விண்ணப்பிக்கவும் அனுமதிக்கலாம்' என்று நிபுணர் குழு கூறியுள்ளது.

ஆனால், இப்பரிந்துரை தற்போதைக்கு நடைமுறை சாத்தியமில்லை என்று மத்திய ஆயுதப்படைகளுக்கான செயல் நடவடிக்கை குழு கருத்துத் தெரிவித்துள்ளது. மற்றொரு பரிந்துரையில், "வினாத்தாள் கட்டுப்பாட்டை முழுமையாக எஸ்எஸ்சி நேரடியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். பல்வேறு வகைகளில் வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, அதை வெவ்வேறு மையங்களுக்கு கலவை முறையில் அனுப்ப வேண்டும். தவறான பதில் அளிப்போருக்கு "மதிப்பெண் குறைப்பு' நடவடிக்கை கட்டாயமாக்கப்பட வேண்டும்' என்று நிபுணர் குழு கூறியுள்ளது.

No comments:

Post a Comment