Blogger news

Saturday, 27 December 2014

காலம் போற்றும் காலம் வருமா? By அ. அறிவுநம்பி

மனிதர்களிடம் நிறைகளும் உண்டு, குறைகளும் உண்டு. குறைகளை நீக்கி அவற்றை நிறைகளாக்கிக் கொள்ளும் வாய்ப்புகளும் மனிதர்களிடையே உண்டு. ஆனால், மறுதலையாக நல்ல பல நிறைகளையும் குறைபாடுகளாக மாற்றிக் கொள்வதே நடப்பியல்.
வள்ளுவர் வழங்கிய,

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமையானும் கெடும்

என்ற வைரவரிகளை மறந்துபோய்விட்டோம் என்பதே உண்மை.
பொதுவாக மனிதர்களிடமும் குறிப்பாகத் தமிழர்களிடமும் காணப்பெறும் பெருங்குறை நேரம் போற்றாமை என்பதே. எந்தவிதமான அக்கறையும் காட்டாமல் ஏனோதானோ என மக்கள் நேரங்கடத்துவதை அன்றாடம் காணமுடிகின்றது. 

பருவத்தே பயிர்செய், காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பன போன்ற மரபுச் சொல்லாடல்கள் ஏட்டில் மட்டுமே தென்படுகின்றன. ஒரு சாதாரண நிகழ்ச்சியைக்கூட உரிய நேரத்தில் தொடங்கி உரிய நேரத்தில் முடிப்பது என்பது முயற்கொம்பாகிப் போனது. 

கூட்டம் மாலை ஆறுமணிக்கு ஆரம்பம் என அழைப்பிதழில் இருக்கும். ஏழுமணிக்குமேல்தான் நிகழ்வு தொடங்கும். "பார்வையாளர்கள் உரிய நேரத்திற்கு வருவதில்லை' என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் வாதம். "ஆறுமணிக்கு என்று சொல்வார்கள் ஏழுமணிக்குத்தான் தொடங்குவார்கள்' என்பது பார்வையாளர் தரப்பு வாதம். 

தென்தமிழகத்தில் தொடர் சொற்பொழிவாற்றிவிட்டு ஊர் திரும்பிய ஒரு சொற்பொழிவாளர் கூறிய செய்திகளை இங்கே பரிமாறுவது நலந்தரும். அந்தச் சொற்பொழிவாளர் அமைப்பாளர்களிடம், "ஆறுமணிக்கு நிகழ்ச்சி எனப்போட்டால் ஏழுமணிக்குத்தான் வருகிறார்கள் எனக் கூறுகிறீர்களே நிகழ்ச்சி ஐந்துமணிக்கு என அச்சிட்டால் ஆறுமணிக்கு மக்கள் வந்துவிடுவார்களே' எனக் கேட்டுள்ளார். "அப்படியில்லை அவர்கள் அப்படிப் போட்டாலும் ஏழுமணிக்குத்தான் வருவார்கள்' என்று ஒருங்கிணைப்பாளர் விடை தந்துள்ளார். 

எவ்வாறாயினும் அழைப்பிதழில் குறிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் எந்த ஒரு அரங்கமும் செயல்படவில்லை என்பதே பெறப்படும் முடிவாகிறது.
அரங்கமே காலியாக இருந்தாலும், தலைமை தாங்குபவர் வரவில்லை என்றாலும் சொன்ன நேரத்துக்கு நிகழ்ச்சியைத் தொடங்கி நடத்திக்காட்டியவர் கம்பனடிப்பொடி சா.கணேசன். 

ஒலிபெருக்கிமுன் நின்று "கம்பன் வாழ்க' என முழக்கமிட்டுவிட்டு, "இன்றைய காலை நிகழ்ச்சி சரியாக இன்னும் பதினான்கரை நிமிடத்தில் தொடங்கும்' என்பார். 

பதினான்கு என்று குறைத்தோ பதினைந்து என அரைநிமிடம் நீட்டித்துக் கொண்டோ அவ்வறிவிப்பு இருக்காது. சிறிது நேரங்கழித்து மீண்டும் அவர் ஒலிபெருக்கிமுன் நிற்கும்போது மிகச்சரியாக பதினான்கரை மணித்துளிகள் பறந்திருக்கும். 

இன்றைக்கும் இந்த முறைமையினைப் புதுவை, சென்னை, கோவை, மதுரை போன்ற கம்பன் கழகங்களும், வேறுசில அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன. அவர்கள் மிகச்சரியாகத் தொடங்கிவிடுவார்கள் என்ற பயமும், சிந்தனையும் சேரப் பார்வையாளர்கள் சரியான காலத்தில் அரங்கில் இருப்பர். 

இப்படிப் பழக்கப்படுத்தாமைதான் பலமேடைகளை நாசப்படுத்தி, எல்லாத் தரப்பு மக்களையும் தொல்லைப்படுத்துகிறது.

நிமிடக் கணக்கில் துல்லியம் காட்டும் இடங்கள் பல உள்ளன. வானொலியில் ஒருவர் உரைக்கான நேர அளவு பதின்மூன்று மணித்துளிகள் என்றால் அந்த அளவை அவர் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும். ஒருமணித்துளிகூடக் கூட்டிக் கொள்ள முடியாது, கூடாது. அங்கேதான் காலம் பொன் போன்றது என்ற தொடரின் முழுமைப்பாட்டைக் காணமுடியும். 

ஆனால், பொதுமேடையில் ஒரு கட்டுப்பாடு காணப்பெறவில்லை என்பது பேருண்மை. வரவேற்புரையையே ஒருவர் ஒருமணிநேரம் பேசியமரும் மேடைகளும் உண்டு. அடுத்தவரின் நேரத்தைக் களவாடுகிறோம் என்ற உணர்ச்சி பலரிடம் இருப்பதில்லை.

இந்தச் சிக்கலை வெளிநாட்டினர் வெகுஎளிதாக வெல்கின்றனர். மேடையைப் பகிர்பவர்களுக்கான நேரத்தை நொடியளவில்கூடப் பட்டியலிட்டுத் தந்துவிடுகின்றனர். அறிமுகவுரைக்கு ஏழு நிமிடங்கள் எனக்குறிப்பிட்டு அடைப்புக்குறிக்குள் 10.03 முதல் 10.10 வரை எனச் சுட்டிக்காட்டியிருப்பர். 

மணித்துளி நிகழ்முறை (ம்ண்ய்ன்ற்ங் ற்ர் ம்ண்ய்ன்ற்ங் ல்ழ்ர்ஞ்ழ்ஹம்ம்ங்க்) என்பது அவர்களைச் செப்பமுடைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துகொள்ள வாய்ப்பு நல்குகின்றது. ஏழுநிமிட நேரம் தரப்பட்ட உரை எட்டு நிமிடங்களாகப் போனால்கூட அதனை அநாகரிகமென்று கருதுகின்றனர். 

நேரம் என்பது நம்கையில்தான் உள்ளது. உள்ளத்தில் உரிய விழிப்பு வருமானால் தேவைப்படும் நேரச்சுருக்கமும் தாமாகவே விளையும். ஒரு பதச்சோறாக ஒரு நிகழ்வை இங்கே பதிவு செய்யலாம். 

படைப்பாளரும், மதிப்பீட்டாளருமான க.நா. சுப்பிரமணியம் புதுவைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் சிலகாலம் வருகைதரு பேராசிரியராகப் (ஸ்ண்ள்ண்ற்ண்ய்ஞ் ல்ழ்ர்ச்ங்ள்ள்ர்ழ்) பணிபுரிந்தார். 

ஒருநாள் மாலை, என்னிடம் சிலப்பதிகாரத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் ஒன்றைக் கொடுத்தபடி "இன்னும் ஒரு வாரத்தில் படித்துவிட்டுத் திருப்பித் தந்துவிடுவீர்களா' எனக் கேட்டார். சரியென்று தலையாட்டினேன். 

ஒருவாரம் கழிந்தபின் "படித்து முடித்துவிட்டீர்களா' என்று அவர் கேட்க, "படிக்க நேரமில்லாதுபோனது. சீக்கிரம் முடித்துவிடுவேன்' எனப் பதில் கூறினேன். 

அரைமணி நேரங்கழிந்தபின் "காலைலே எத்தனை மணிக்கு எந்திரிப்பீங்க' என்றார். "ஆறுமணிக்கெல்லாம் எந்திரிச்சிடுவேன்' என்பது என் பதில். "ஒண்ணு செய்ங்களேன் நாளைலேயிருந்து அஞ்சுமணிக்கு எந்திரிங்க. ஒரு நாலே நாள் தெனமும் கூடுதலா ஒரு மணிநேரம் கெடைக்கும் நாலு நாளைக்கு நாலு மணிநேரம் புத்தகத்தைப் படிச்சிடலாம்' என மெதுவாக அவர் கூறியபோது மயிலிறகால் நீவுவதுபோல் மெல்லிய அதிர்வு என்னுள் ஏற்பட்டது. ஆனால் வலித்தது.
மூன்றாம் நாளே அவரிடம் நூலைத் தந்தேன். "என்ன கோவமா? ஒடனே திருப்பித் தர்ரீங்க படிச்சீங்களா இல்லியா' எனப் பேசமுற்பட்ட அவரை இடைமறித்தேன். "ஆறுமணிக்குப் பதிலாக ஐந்து மணிக்கு எழுந்தால் கூடுதலாக ஒருமணிநேரம் கிடைக்கும் என நீங்கள்தானே சொன்னீர்கள். நான் நான்கு மணிக்கே எழுந்து படிக்க ஆரம்பித்தேன். இரண்டுமணி நேரம் மிகுதியாகக் கிடைத்தது. அதனால், நான்கு நாளுக்குப் பதில் இரண்டு நாளிலேயே நூலை முடித்துவிட்டேன். வேண்டுமானால் எந்தப் பக்கத்திலிருந்தும் கேள்வி கேட்டுப் பாருங்கள்' என்றேன் மிடுக்கோடு.
ஒற்றை விரலால் தட்டச்சுச் செய்து கொண்டிருந்த அவர் எழுந்து வந்து என்னைக் கைகுலுக்கிப் பாராட்டியது இன்றும் பசுமையாக உளது. இந்நிகழ்வு உணர்த்துவது ஒன்றைத்தான். நேரம் என்பது வெளியிலிருந்து வாங்கப்படுவதில்லை. நெஞ்சம் விழைந்தால் நேரம் நம் கைவசப்படும் என்பதுதான் அது.

நேரத்தில் கவனம் செலுத்தியவர்கள் நிறையவே பணிபுரிந்துள்ளனர். மு. வரதராசனாரைப் பற்றிப் பேசிய பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்ட செய்தி கவனத்துக்குரியது. 

அந்த ஆண்டு பயிலவந்த மாணவர்களுக்கான முதல் வகுப்புக்குள் மு.வ. நுழைவாராம். வகுப்பைத் தொடங்கியதும் கால அட்டவணையில் 10 மணிமுதல் 11 மணிவரை மு.வ.வின் வகுப்பு என்று போடப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். பத்துமணி ஒருநிமிடம் ஆகியும் மு. வ. வகுப்பிற்குள் வரவில்லை என்றால் இரண்டு காரணங்கள்தான் இருக்கும். ஒன்று மு.வ. ஊரில் இல்லை இல்லையேல் மு.வ. உயிருடன் இல்லை என்பதுதான் காணமாகும். 

கண்டிப்பும் நேர்மையும் உறவாடப் பேசிய இவர்போல இன்று எத்தனைபேரைச் சுட்டிக்காட்ட இயலும்?

அண்மையில் இலண்டனுக்குப் போனபோது கிரீன்விச் பகுதிக்குப் போகத் தொடர் வண்டியில் ஏறினோம். 10.17 மணிக்கு வண்டி புறப்படும் என அறிவிப்புப் பலகையும், ஒலிபெருக்கியும் கூறின. துல்லியாக அதே நேரம் வண்டி புறப்பட்டபோது எனக்கெதிரே அமர்ந்திருந்த ஒரு பெண்மணி தன் கைக்கடிகாரத்தை 10.17 எனத் திருத்தி வைத்துக் கொண்டார். 

அரைநொடிகூடத் தாமதம் செய்யாமல் பல நிறுத்தங்களில் நின்று புறப்பட்டும் வண்டி சென்று கொண்டிருந்தது. என்னை அழைத்துக் கொண்டு போவதற்காக மான்செட்டரில் இருந்து வந்திருந்த என்தம்பி மகனிடம் ஓட்டுநரைப் பாராட்ட வேண்டும் என்றேன். பகபகவென்று சிரித்த அவன் இந்தத் தொடர்வண்டியை மனிதர்கள் ஓட்டுவதில்லை மின்காந்த நுட்பத்துடன் ஓட்டுநரின்றியே இவை இயங்கும் என்றபோது நாணமேற்பட்டது. 

எந்திரங்கள் இயக்கினாலும் பயணிகள் மனிதர்கள்தாமே? மிகச்சரியாக ஏறி, இறங்கி அவர்கள் செயல்படுவதில் சிக்கலேதும் ஏற்படவில்லையே என்ற உணர்வு வந்தது. 

நம் நாட்டில் மிகச்சரியாக நேரத்தில் ஒரு தொடர்வண்டி நிலையத்துக்குள் வந்தபோது இது நேற்றைக்கு இதே நேரம் வரவேண்டிய வண்டி என நகைச்சுவைக்காகக் கூறுவர் ஆனால், அப்படித்தானே நிகழவும் செய்கிறது. 

தேர்வறைக்குள் தேர்வுநேரம் தொடங்கி அரைமணிநேரமாகிவிட்டால் தேர்வெழுத எவரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. அங்கே மட்டும் சரியான நேரத்தில் பங்காற்ற முடிகிறதே. 

அது மாதிரியான கட்டுப்பாட்டை மனமே வரித்துக்கொண்டால் எந்த இடத்திலும் நேரம் பாழாவதில்லை!

கட்டுரையாளர்: பேராசிரியர், மையப் பல்கலைக்கழகம், புதுச்சேரி.

No comments:

Post a Comment