இப்போதெல்லாம் 40 வயதுக்காரர்களே சலித்துப் போய்ப் பழைய கதையை
ஆரம்பித்துவிடுகிறார்கள். 60 வயதைத் தாண்டியவர்கள்தான் முன்பு ‘‘அந்தக்
காலத்துல ...’’என்று ஆரம்பிப்பார்கள்.
கடந்த சொர்க்கம்
“முன்னெல்லாம் வேலைன்னா ஒரு மரியாதை. கம்பெனின்னா ஒரு விசுவாசம் இருக்கும். இப்பெல்லாம் எங்கே சார்?”
“எல்லாம் மொபைல பிடிச்சிட்டு உக்காந்திடுறாங்க. இந்த டெக்னாலஜி வந்து எல்லாத்தையும் கெடுத்துடுச்சு!”
இதுபோலப் பணியிடத்தில் நிறைய குரல்கள் கேட்கும். கடந்த காலம் சொர்க்கம்.
நிகழ்காலம் நரகம். நல்லவை எல்லாம் போய்விட்டன. இவைதான் சாராம்சம்.
லெட்டரில் காதல்
ஒரு தொழிற்சாலையின் முதுநிலை மேலாளருடன் பேசிக்கொண்டிருந்தேன். புதிதாய்ச்
சேர்ந்தவர்கள் நிலைப்பதில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தார். “எவ்வளவு
கொடுத்தாலும் திருப்தி அடைய மாட்டார்கள்!” என்று முடித்தார்.
பிறகு, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் சில இளைஞர்களுடன்
பேசிக்கொண்டிருந்தேன். “எது செஞ்சாலும் பழைய கதையையே பேசிக்கொண்டிருந்தால்
சீக்கிரம் வெறுப்பு வருது!” என்றார்கள்.
ஒரு காதல் கடிதத்தை இன்லேண்டு லெட்டரில் எழுதி அனுப்பி அடுத்த வாரம் வரை
பதிலுக்குக் காத்திருப்பது அந்தக் கால மனிதர்களுக்குச் சுகம்தான். ஆனால்
இன்று, அந்த அந்த வினாடியிலேயே உடனடியாக இமெயில், செல்போனில் இளைஞர்கள்
காதல் அரட்டை அடித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு இன்லாண்ட் லெட்டர் காதல்
புரிவது சிரமம்.
அதே போல சைக்கிளில் குரங்குப் பெடல் அடித்து, ஓட்டியவர்களின் அனுபவத்தை
இந்தக் காலத்தினருக்குப் புரிய வைப்பது சிரமம். பலவகையான வேகங்களில்
பறக்கும் வாகனங்களையும் ஓட்டிப் பார்த்த சலிப்பு இன்றைய தலைமுறையினரிடம்
தெரிகிறது. சட்டை கிழியும் நெரிசலில் சினிமா டிக்கெட் வாங்கிய தலைமுறை அது.
சீட் நம்பர் பார்த்து ஆன்லைனில் டிக்கெட்டும், பாப்கார்னும் ஆர்டர்
செய்யும் தலைமுறை இது.
காலச் சுழற்சி
பழைய வாழ்க்கையை இன்று திரும்பிப் பார்த்து ரசித்தால் நன்றாகத்தான்
இருக்கும். ஆனால், மீண்டும் அதை வாழச் சொன்னால் முடியுமா? கண்டிப்பாக
இயலாது. தொழில்நுட்பமும் காலச் சுழற்சியும் பல வசதிகளை வயது வித்தியாசம்
பார்க்காமல் மனிதர்களுக்குச் செய்து கொடுத்துவிட்டன.
ரயில் கட்டணத்துக்காக மணிக்கணக்கில் காத்து நின்ற பெரியவர்கள் இன்று
ஆன்லைனில் ரயில் டிக்கெட் பதிவு செய்கிறார்கள். சாலையில் ஓடிஓடி ஆட்டோ
தேடியவர்கள் இன்று போனில் டிரைவரிடம் வழி சொல்லிவிட்டு நிம்மதியாகக்
காத்திருக்கிறார்கள்.
ரோபோக்களை வைத்து வைத்தியம் செய்யும் அளவு வந்துவிட்டது. மின் விசிறியைப்
பார்த்துப் பார்த்து அணைத்தவர்கள் இன்று குற்ற உணர்ச்சியில்லாமல் ஏ.சி.
போட்டுவிட்டு அந்தப் பக்கம் நகர்கிறார்கள். பொருளாதார சுபிட்சம் புதிய
வாழ்க்கை முறைகளுக்கு இவர்களைக் கடத்திச் சென்றிருக்கிறது.
அதையெல்லாம் அனுபவித்துக்கொண்டே பழையதைப் போற்றுகிறேன் என்று நிகழ் காலத்தை
நிந்திப்பது நியாயமல்ல. இன்றைய வாழ்க்கை முறை வேண்டும். ஆனால் அதற்குத்
தரும் விலைகள் மனதுக்கு உகந்ததாக இல்லை. இதுதான் பிரச்சினை.
விமர்சிக்கலாமா?
ஆனால், கடந்த காலத்தைப் பார்க்காத இக்காலத்தினரிடம் அவர்கள் வாழ்க்கை
முறையை விமர்சிப்பது அவர்களிடமிருந்து உங்களை அன்னியப்படுத்தும். நாம்
மாறிய வேகம் நமக்கே பிடிபடாதபோது, அவர்கள் எப்படி இதை உணர முடியும்?
பெண்ணிடம் காதலைச் சொல்ல முடியாமல் படம் முழுதும் ஏழு பாட்டுப் பாடி, தாடி
வளர்த்து, ஒரு தலை ராகம் திரைப்படத்தின் கதாநாயகன் செத்துப் போவான். அந்தக்
கதை நிச்சயம் இந்தக் கால மனிதர்களுக்குப் புரியாது. அதே போலச் செல்வராகவன்
திரைப்படங்களை வயதானவர்கள் உத்தரவாதமாக வெறுப்பதற்கு அந்த உலகம்
புரியாததுதான் காரணம்.
நமது பங்கு
பணியிடத்தில் வயதானவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய
இளைஞர்களின் பிழைகளை அவர்கள் வயதை வைத்துத் திட்டாதீர்கள். காரணம்,
அவர்களின் உலகைக் கட்டமைத்ததில் நமக்குப் பெரும் பங்கு உண்டு.
சிறை வாழ்க்கைகூட 20 வருடங்கள் கழித்துத் திரும்ப யோசித்தால் சிலிர்ப்புடன்தான் யோசிக்க வைக்கும். அது மனதின் தன்மை.
“அன்னிக்கு கையில ஒரு பைசா இல்லை. ஆனால் அவ்வளவு சந்தோஷம் இருந்தது!” என்று
சொல்ல முடிவது இன்று நீங்கள் சம்பாதித்து முன்னேறியதால். 30 வருடங்களாகக்
கையில் காசில்லாமல் வாழ்ந்திருந்தால் இப்படி நினைத்துச் சிலிர்க்க
முடியுமா?
இன்றுள்ள தலைமுறை பெற்ற வசதிகள் நாம் அவர்களுக்குப் பெற்றுத் தந்தவை. அதன்
அருமையை அவர்கள் உணரத் தேவையில்லை. காரணம், நமக்கு முன்னே சென்ற
தலைமுறைகளின் உழைப்பை நாம் பெருமையாகப் பேசிக்கொண்டிருக்கிறோமா? இல்லையே!
ஏமாற்றங்களா?
உங்களுக்குக் கீழே உள்ள பணியாளர்கள் செய்யும் பிழைகளை வெறும் பிழைகளாக
மட்டும் சுட்டிக் காட்டுங்கள். தலைமுறையை இணைத்து அவர்களைச் சாட வேண்டாம்.
அவர்கள் உலகைப் புரிந்துகொள்ளுங்கள். காரணம், அந்த உலகம் அமைய வாழ்க்கை
முழுதும் பணியாற்றியவர்கள் நாம்.
வேகமாகச் சுழலும் வாழ்வில் பெரும் மாற்றங்களைச் சந்தித்தது உங்களது
பாக்கியம். அந்த மாற்றங்களை ஏமாற்றங்களாகப் பார்க்காமல் அனுபவங்களாகப்
பார்த்தால் எந்த வேலையும் இனிக்கும். எந்த வயதுப் பணியாளருடனும்
மகிழ்ச்சியுடன் பணி புரிய முடியும்!
No comments:
Post a Comment